தொழிற்சங்கத் தலைவர் தியாகி ஏ.சுப்ரமணியம் காலமானார்

சுதந்திரப் போராட்டத் தியாகியும், எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் மாநில கெளரவத்

சுதந்திரப் போராட்டத் தியாகியும், எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் மாநில கெளரவத் தலைவருமான ஏ.சுப்ரமணியம் (94), கோவையில் புதன்கிழமை காலமானார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூரில் கடந்த 18.10.1925 அன்று, கே.எஸ்.அனந்தநாராயண ஐயர் - லட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்த ஏ.சுப்ரமணியம், திருச்சூர் புனித தாமஸ் கல்லூரியில் பயின்றவர். கல்லூரிக் காலத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட இவர், அதற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
இதையடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்த இவர், சேலம், மேட்டூர் ஆகிய இடங்களில் தொழிற்சங்க நிர்வாகியாக இருந்துள்ளார். 1950ஆம் ஆண்டில் சோஷலிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலராக இருந்த இவர், அடுத்த ஆண்டில் மாநிலச் செயலரானார். சமுதாயம், புதுவாழ்வு போன்ற வார இதழ்களை வெளியிட்டு வந்த இவர், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி சார்பில் கோவை- சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
சோஷலிஸ்ட் கட்சி காங்கிரஸில் இணைந்த பிறகு 1972ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த ஏ.சுப்ரமணியம், மறைந்த தியாகி கோவை என்.ஜி.ராமசாமி தொடங்கிய கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலராக சுமார் 58 ஆண்டுகளாகப் பதவி வகித்துள்ளார். மேலும், பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுச் செயலராக 35 ஆண்டுகளாக இருந்துள்ள சுப்ரமணியம், அகில இந்திய எச்.எம்.எஸ். சங்கத்தின் தலைவராக 3 முறையும், மாநில எச்.எம்.எஸ். சங்கத்தின் பொதுச் செயலாளராக சுமார் 40 ஆண்டுகளும் பொறுப்பு வகித்துள்ளார். இறுதியாக மாநில எச்.எம்.எஸ். சங்கத்தின் கெளரவத் தலைவராக இருந்தார்.
இதைத் தவிர மேட்டூர், சேலம், கோவை, நீலகிரி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இயங்கி வந்த ஏராளமான தொழிற்சங்கங்களிலும் பணியாற்றியுள்ளார். எச்.எம்.எஸ். சார்பில் நடைபெற்ற போராட்டங்களுக்காக பல முறை சிறை சென்றுள்ளார். பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஏ.சுப்ரமணியம் திருமணம் செய்து கொள்ளவில்லை. வயது மூப்பு காரணமாக கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த ஏ.சுப்ரமணியம், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் காலமானார்.
அவரது உடல் சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அகில இந்திய எச்.எம்.எஸ். தொழிற்சங்கத் தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர், மாநில செயல் தலைவர் எம்.சுப்ரமணியபிள்ளை, மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மதிமுக அவைத் தலைவர் எஸ்.துரைசாமி, பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாலைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.  வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
கோவைக்குப் பெருமை சேர்த்தவர்: மறைந்த ஏ.சுப்ரமணியம் குறித்து காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயகுமார் கூறியதாவது: 
தொழிற்சங்க மாமேதையான ஏ.சுப்ரமணியம் கோவை பகுதியில் பஞ்சாலைத் தொழில் அமைப்புகளின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர். என்.டி.சி. ஆலைகள் பிரச்னை, போனஸ் உள்ளிட்ட தொழிலாளர்களின் பிரச்னைகளுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் போராடி அவற்றைத் தீர்த்து வைத்தவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் கோவை பகுதிக்கு வரும்போது அவர்களின் பேச்சை தமிழாக்கம் செய்தவர். பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழில் அமைப்புகள் தொடர்பாக அறிந்து வந்து, அவற்றை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர்.
கண்ணியம் மிகுந்த போராளி: முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந.பழனிசாமி (தி.மு.க.) கூறியதாவது: 
கோவை தொழிற்சங்க முன்னோடிகளில் ஏ.எஸ். தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கிறார். வசதியான, ஆச்சாரம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்
, கண்ணியம் மிக்கவராகவும், எளிமையானவராகவும் சுயமரியாதை வீரராகவும், பழமைவாத எதிர்ப்பாளராகவும் இருந்தவர். கோவை- சிங்காநல்லூர் பகுதியில் சலுகை விலையிலான தொழிலாளர் குடியிருப்புத் திட்டம் (எஸ்.ஐ.எச்.எஸ்.) பிரச்னை 40 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1996-ஆம் ஆண்டில் நான் அமைச்சராக இருந்தபோது அவற்றைத் தீர்த்து வைக்கத் தூண்டுகோலாக இருந்தவர் ஏ.சுப்ரமணியம். அவரது மறைவு எச்.எம்.எஸ்., காங்கிரஸ் இயக்கத்தினருக்கு மட்டுமின்றி அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும்,  கோவை மாநகருக்கும் இழப்பு என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com