ஈரோடு

3 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நிரம்பி வரும் பெரும்பள்ளம் அணை

DIN


நடப்பு ஆண்டு பருவ மழை தொடர்ந்து பெய்ததால், வறட்சியில் சிக்கியிருந்த சத்தியமங்கலம், பெரும்பள்ளம் அணை தற்போது வேகமாக நிரம்பி வருகிறது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரும்பள்ளம் நீர்த்தேக்கம். இதன் நீர்மட்டக் கொள்ளளவு 31 அடி. இதில் 1.15 டிஎம்சி நீர் இருப்பு தேக்கி வைக்க இயலும். இந்த நீர்த்தேக்கம் மூலம் 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர், அத்தியூர், கம்பத்ராயன்மலை, இருட்டிபாளையம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் இதற்கு நீராதாரமாக உள்ளது. அணையில் நீர் இருப்பின்போது மீன் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அணையில் தண்ணீர் இருக்கும்போது கிணறுகளில் ஊற்றெடுக்கும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாகப் பருவ மழை பொய்த்துவிட்டதால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதன் காரணமாக அணை வறண்டு மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடம்பூர், அத்தியூர், கம்பத்ராயன்மலை, இருட்டிபாளையம் உள்ளிட்ட மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த பெரும்பள்ளம் அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நிரம்புவதால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள
விவசாயக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் தற்போது அணை 20 அடியை எட்டியுள்ளது.
இன்னும் 10 அடி நீர்வரத்து வந்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர். அணையில் நீர் நிரம்புவதால் வனத்தில் இருந்து வரும் யானைகள், சிறுத்தை, புலிகள், காட்டெருமைகள் தண்ணீர் குடித்து தாகம் தணித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT