முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

ஈரோடு, திண்டல்  வேலாயுதசாமி கோயில் உள்பட பல்வேறு முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு, திண்டல்  வேலாயுதசாமி கோயில் உள்பட பல்வேறு முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஈரோடு திண்டலில் உள்ள பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 8 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும்  காலையில் முருகனுக்கு சிறப்பு பூஜைகளுடன்  தீபாராதனை நடைபெற்றது. விழாவின் ஆறாவது நாளான செவ்வாய்க்கிழமை காலையில் ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து திண்டல் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதையொட்டி, பக்தர்கள் கொண்டு வந்த  பாலைக் கொண்டு  முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலையில் நடைபெற்ற  சூரசம்ஹார விழாவையொட்டி, முருகனுக்கு  சிறப்பு அலங்காரம் செய்து கோயிலில் இருந்து அடிவாரத்துக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு சூரனை வதம் செய்யும்  நிகழ்ச்சி நடைபெற்றது. கிரிவலப் பாதையில் சென்ற முருகன்  நரகாசூரனையும், சிங்கமுகாசூரனையும் வதம் செய்தார். அதன் பின்னர் கோயில்  முன்பு வந்தபோது சூரபத்மனை, முருகன் தனது வேல் மூலமாக தலையைத் துண்டித்து வதம் செய்யும் காட்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, வானவேடிக்கைகளுடன் வெற்றி வாகை சூடிய முருகன் சேவல் கொடியுடன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது திரண்டு நின்ற பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு முருகனை தரிசித்தனர்.
புதன்கிழமை  காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவ பூஜைகள் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, வேலாயுதசாமி வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணமும், பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகனின் கிரிவலம் நடைபெறுகிறது. 
இதேபோல, ஈரோடு ஈஸ்வரன் கோயில், , சென்னிமலை சாலை மலேசியா முருகன் கோயில், மகிமாலீஸ்வரர் கோயில், காவிரிக்கரை சோழிஸ்வரர் கோயில், கோட்டை முத்துகுமாரசாமி கோயில், ரயில்வே காலனி சுப்பிரமணியசாமி கோயில், முனிசிபல்காலனி பாலமுருகன் கோயில், வெண்டிபாளையம் மயில்பிரியர் கோயில் ஆகிய கோயில்களில்  சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில்... 
பவானி, நவ. 13: கந்த சஷ்டியையொட்டி, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம், சூரசம்ஹார வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் கந்தசஷ்டி வழிபாடு நவம்பர் 7 ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து, வள்ளி தெய்வானை உடனமர் ஆறுமுகக் கடவுளுக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், உலக நன்மை பெற வேண்டி சிறப்பு யாக வழிபாடு நடைபெற்றது. 
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, தொழிலதிபர் அக்னி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதையடுத்து, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார வழிபாடு நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். வள்ளி, தெய்வானை உடனமர் ஆறுமுகக் கடவுளுக்கு திருகல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com