தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு

பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ள நிலையில், அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இதுபோல தனித்தனி உட்பிரிவு பெயர்களில் அழைக்கப்பட்ட பிற சாதியினர் இதேபோல பெயர் மாற்றக் கோரிக்கையை முன் வைத்தபோது அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றியது. இந்நிலையில், தேவேந்திர குல வேளாளர் மக்களின் கோரிக்கையை மட்டும் நீண்ட காலமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தின் முடிவில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட ரீதியாக பரிசீலனை செய்ய நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்த விவகாரம் குறித்து பரிந்துரை செய்யும் என அதில் கூறப்பட்டது. ஆனால், அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தில் நீதியரசர் ஜனார்த்தனம் கமிட்டி என்ன ஆனது எனத் தெரியவில்லை.
எனவே, தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அனைத்து உட்பிரிவுகளையும்  ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com