ஈரோடு

கோபி பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கிவைத்தார்

DIN


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மானியத்துடன் கூடிய நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் கோபி அருகே உள்ள ஏழூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 2018-19ஆம் ஆண்டு குறுவை சாகுபடி நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் குறுவை சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக ஈரோடு மண்டலத்தில் முதல் கட்டமாக ஏழூர், டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, நஞ்சகவுண்டம்பாளையம், புது வள்ளியம்பாளையம், காசிபாளையம், புதுக்கரைப் புதூர், கூகலூர், கரட்டடிபாளையம், மேவாணி, அத்தாணி ஆகிய 11 இடங்களில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி ஏழூரில் அமைக்கப்பட்ட புதிய நெல் கொள்முதல் நிலையத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழை திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கோமாரி நோயைத் தடுப்பதற்காக கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து கோமாரி நோயைத் தடுப்பதற்காக முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோமாரி நோய்த் தாக்குதலில் உயிரிழந்த கால்நடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பின் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி, நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் தம்பி சுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT