காடப்பநல்லூரில் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற பொது மக்கள் கோரிக்கை

பவானி அருகே மூன்று கிராமங்களுக்குச் செல்லும் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என

பவானி அருகே மூன்று கிராமங்களுக்குச் செல்லும் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பவானியை அடுத்த காடப்பநல்லூர் கிராமத்தில், பிரதான சாலையில் இருந்து மேட்டூர், மேற்குக்கரை வாய்க்கால் வழியாக முத்துக்கவுண்டனூர், பரசுராமன் காட்டூர், சேவாகவுண்டன் கொட்டாய் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பாதை உள்ளது. இக்கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவரும் நிலையில் வாய்க்கால் பகுதியில் உள்ள வழித்தடத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். 
இக்கிராமங்களுக்கு கார், வாகனங்கள், பள்ளிப் பேருந்துகளும் சென்று வந்தன. இந்நிலையில், இச்சாலையின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, நெல் நடவு செய்யப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதுகுறித்து, காவல் துறையினர் விசாரணை நடத்தியபோதும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. 
இதுகுறித்து, பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் பவானி வட்டாட்சியர் சேவியர் சகாயம் பிரபு பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது, போக்குவரத்துக்கு உதவும் வகையில் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் யாரும் வராத நிலையில், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்வதுடன், ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இப்பேச்சுவார்த்தையில் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் சாமிநாதன், மண்டலத் துணை வட்டாட்சியர் நல்லசாமி, பவானி காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வசந்தி மனோகரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com