திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார்: செப்டம்பர் 14 இல் காங்கிரஸ் சார்பில் கண்டனப் பேரணி

DIN | Published: 12th September 2018 01:19 AM

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செப்டம்பர் 14 இல் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி வெளியிட்ட அறிக்கை:
மோடி தலைமையிலான பாஜக அரசு பாதுகாப்புத் துறைக்கு வாங்கிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் பல ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 
ஒரு விமானம் வாங்க ரூ. 560 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு வந்த மோடி அரசு ஒப்பந்தத்தை மாற்றி ஒரு விமானம் ரூ. 1,650 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஒரு தனியார் பெரு நிறுவனம் மட்டும் மறைமுகமாக ரூ. 41 ஆயிரம் கோடி லாபம் அடைந்துள்ளது.
இந்த முறைகேட்டைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளபடி செப்டம்பர் 14 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு - நசியனூர் சாலை பிரிவு, சம்பத் நகரிலிருந்து மாபெரும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும்.
இப்பேரணியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன், வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

More from the section

காட்டாற்று வெள்ளத்தைப் பயணிகளுடன் கடக்கும் வாகனங்கள்: பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் ஆறுதல்
புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பெரிய அக்ரஹாரத்தில் ரூ. 29 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்
புதுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம்