கடம்பூர் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: விவசாயி சாவு; 73 பேர் காயம்

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப் பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப் பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 73 பேர் காயமடைந்தனர்.  
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த காடகநல்லியில் இருந்து கடம்பூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி தனியார் பேருந்து திங்கள்கிழமை புறப்பட்டது. இதில் 75 பேர் பயணித்தனர். ஓட்டுநர் பிரபாகரன் பேருந்தை இயக்கினார். நடத்துநர் சரவணன் உடன் வந்தார்.  
பசுவனாபுரம், பங்களாமேடு என்ற இடத்தில் வேகமாக வந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் மரத்தின் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில் காடகநல்லியைச் சேர்ந்த விவசாயி சௌந்தரராஜ் (36) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  
தகவல் அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் இடிபாடுகளில் 70க்கு மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதால், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. 
42 பெண்கள், 30 ஆண்கள், ஒரு சிறுவன் ஆகியோர் மீட்கப்பட்டு  சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த 11 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
ஓட்டுநர் பிரபாகரன் அதிவேகமாகவும் செல்லிடப்பேசியில் பேசியபடியும் பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்தார். 
விபத்து நடந்த இடத்தை பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன், வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு,  சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். விபத்தில் உயிரிழந்த சௌந்தரராஜ் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் எம்எல்ஏ ஈஸ்வரன் ஆறுதல் கூறினார். 
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பயணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில்,  "விபத்து நடந்த இடத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில், தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com