பவானியில் மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள் பறிமுதல்

பவானியில் வருவாய்த் துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

பவானியில் வருவாய்த் துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
பவானி ஆற்றில் மூலப்பாளையம் பகுதியிலிருந்து மணல் கடத்திச் செல்வதாக ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளர் தாமரைக்கொடிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஈரோடு மண்டல துணை வட்டாட்சியர் சண்முகசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் அரச்சலகுமார், சிலம்பரசி கொண்ட குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது, சென்னாநாயக்கனூர் அருகே வேகமாக வந்த டிராக்டரை வழிமறித்து சோதனையிட்டபோது, ஆற்றிலிருந்து மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. 
இதேபோல, பவானி வட்டாட்சியர் வி.சிவகாமி தலைமையில் வருவாய்த் துறையினர் பவானி பழைய பேருந்து நிலையம் அருகே சென்ற டிராக்டரில் சோதனை நடத்தினர். அப்போது, மேற்பரப்பில் செயற்கை மணல் காணப்பட்டது. சந்தேகப்பட்ட அதிகாரிகள் சோதனையிட்டபோது ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரு டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு பவானி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டன.
பவானி துணை வட்டாட்சியர் (பயிற்சி) எம்.சரவணன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜா, அலுவலர்கள் பழனிபுரம் பகுதியில் பவானி ஆற்றில் இறங்கி செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 300 க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கடத்தலுக்குத் தயார் நிலையில் இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து, அப்பகுதியினர் உதவியுடன் மூட்டைகளிலிருந்த மணல் மீண்டும் ஆற்றுக்குள் கொட்டப்பட்டது. பின்னர், சேகரிக்கப்பட்ட சிமென்ட் பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மணல் திருட்டைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மணல் திருட்டு துணிகரமாக நடைபெற்று வருகிறது. எனவே, மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com