பெரிய அக்ரஹாரத்தில் ரூ. 29 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் ரூ. 29.38 கோடி மதிப்பில் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடபெற்று வருகிறது.


ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் ரூ. 29.38 கோடி மதிப்பில் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடபெற்று வருகிறது.
ஈரோடு அருகே பெரிய அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் 1987 ஆம் ஆண்டு குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக 648 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்தக் குடியிருப்பு கட்டப்பட்டு 31 ஆண்டுகள் கடந்து பாழடைந்த நிலைக்குச் சென்றது. இந்நிலையில், பால்கனியில் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அந்தக் குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, 4 அடுக்குமாடி கொண்ட 448 வீடுகள் கட்டுவதற்காக 29 கோடியே 38 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்திவிட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.
தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் பூச்சு பணிகளும், மின் வயரிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 79 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இதையடுத்து, விண்ணப்பதாரர்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை 330 பேர் மட்டுமே பணத்தை செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களையும் பணத்தை விரைந்து செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எந்த வீட்டில் குடியிருந்தார்களோ அந்த வீட்டையே மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் இன்னும் 3 மாதகாலத்தில் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகள் முழுமை பெற்று திறப்பு விழா நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஓடைப் பகுதிகளில் குடிசை போட்டு வசித்து வந்தவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் எங்களுக்கு இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தனர். ஆனால், அந்தக் கட்டடம் பழுதடைந்த நிலையில் பழைய குடியிருப்பை இடித்துவிட்டு தற்போது புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் பயனாளிகளின் பங்களிப்பாக ரூ. 79 ஆயிரம் செலுத்தக் கூறியுள்ளனர். இதில் பலரும் பணத்தைக் கட்டியுள்ளார்கள். இங்கு குடியிருந்த பலரும் வெளியே வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலைக்குச் சென்று வருவதால் வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், குலுக்கல் முறையில் வீடு வழங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் ஏற்கெனவே குடியிருந்த வீட்டுக்கு ரேஷன்அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளோம். அதனால், ஏற்கெனவே எந்தெந்த வீட்டில் குடியிருந்தார்களோ அந்த வீட்டையே ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com