கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட வெள்ளோடு ராசா சுவாமி கோயில் சிலைகள்

நீதிமன்ற உத்தரவை ஏற்று, சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு புதிய ராசா சுவாமி கோயிலில் உள்ள

நீதிமன்ற உத்தரவை ஏற்று, சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு புதிய ராசா சுவாமி கோயிலில் உள்ள 8 சிலைகளை அகற்றி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கோயில்  நிர்வாகிகள் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வழிபடும் ராசா சுவாமி கோயில் உள்ளது. நூற்றாண்டு பழைமையான இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்த கோயில் நிர்வாகக் கமிட்டியினர் 2008 ஆம் ஆண்டு 12 சுவாமி சிலைகளை பாலாலயம் செய்தனர். பின்னர், அருகில் கட்டப்பட்ட புதிய கோயிலில்  சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
பழைய கோயிலில் இருந்த உச்சகுமாரசுவாமி, உச்சனன், சார்க்கனன், பெரியண்ண சுவாமி, துவாரகாண்டியம்மன், ஆத்தா - ஐயன், கன்னிமார் சுவாமி, மசிரியம்மன் உள்ளிட்ட 8 சிலைகளை கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். மீதமுள்ள நான்கு சிலைகள் பழைய கோயிலில் தனி அறையில் வைத்து பூட்டி வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த பொன் தீபங்கர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில், பழைய ராசா சுவாமி கோயில் சிலைகளைக் காணவில்லை என புகார் அளித்தார். இதேபோல, வெள்ளோட்டைச் சேர்ந்த வி.என்.துரைசாமி, வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார்களின்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு  போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் கும்பகோணம் தனி நீதிமன்றம், வெள்ளோடு புதிய ராசா சுவாமி கோயிலில் உள்ள சிலைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸார் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று வெள்ளோடு ராசா சுவாமி கோயிலுக்கு வந்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நந்தகுமார், ஆய்வாளர் கமலம், செயல் அலுவலர் ரமணிகாந்த் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  சிலைகளையும் எடுத்துச் செல்வதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், புதிய கோயிலில் புதிய சிலைகளை நிறுவி பாலாலயம் செய்யும் வரை, புராதன சிலைகளை இங்கு வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள், கோயில் நிர்வாகக் குழுவினர் கேட்டுக் கொண்டதன் பேரில் போலீஸார் சிலைகளை எடுக்க அவகாசம் அளித்தனர். 
இந்நிலையில், வெள்ளோடு ராசா சுவாமி கோயிலில் வைக்கப்பட்டு இருந்த சிலைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு போலீஸாரிடம் கோயில் நிர்வாகக் குழுவினர் சிலைகளை சனிக்கிழமை ஒப்படைத்தனர்.  
சனி, ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதால் சிலைகள்அகற்றப்படவில்லை. 
திங்கள்கிழமை வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் புதிய கோயில் வளாகத்தில் உள்ள சிலைகளை அகற்றி,  கும்பகோணம் தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com