குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.    

குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.    
 ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட இ.பி.பி. நகரில் ரூ. 59 லட்சம் மதிப்பிலான சுகாதார நிலையம், காமராஜ் நகரில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம், ஞானபுரத்தில் ரேஷன் கடை என மொத்தம் ஒரு கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்த பிறகு அவர் கூறியதாவது:
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு  சுற்றுச்சூழல் துறையின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாலிதீன் பயன்படுத்துவது இல்லை என்ற நிலையால் மிக விரைவில் இந்தியாவுக்கு வழிகாட்டியாகத் தமிழகம் மாறும் நிலை ஏற்படும்.
 பெரியசேமூர் இ.பி.பி. பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 100  நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட உள்ள நிலையில், வரும்  கல்வி ஆண்டில் இ.பி.பி. பள்ளியைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பாக செயல்படாத பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை  உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பள்ளியையும் அதன் வளாகத்தில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றுவது பற்றிய ஆய்வோ, பரிசீலனையோ இல்லை.
 தமிழகத்தில் 1,311 பள்ளிகளில் ஒரு மாணவர் முதல் 10 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அந்தப் பள்ளிகளுக்கு கூடுதல் செலவாகிறது. இருப்பினும், எந்தப் பள்ளியையும் மூடுகிற நோக்கம் அரசுக்கு இல்லை. போராட்டம் நடத்துவோம் என சொல்கிறவர்கள் பள்ளியில் கூடுதலாக மாணவர்களை எப்படி சேர்ப்பது, அதை எவ்வாறு  சீரமைப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கினால் நன்றாக  இருக்கும். ஒரு பள்ளியில் ஒரு மாணவர், இரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் ரூ. 6 லட்சத்தை அரசு செலவழிக்க வேண்டியுள்ளது. மக்கள் வரிப் பணத்தை  சீரான முறையில் செலவழிப்பது, ஆசிரியர்களை சிறப்பான முறையில்  வழிநடத்திச் செல்வது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து அவர்கள் ஆலோசனை தெரிவிக்கலாம்.
 அங்கன்வாடி குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் இணைக்கும் நோக்கமில்லை. அந்தக் குழந்தைகளுக்கும் எல்கேஜி, யுகேஜி வகுப்பில் ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்களுக்கும் சிறந்த பயிற்சி வழங்கப்படும் என்றார்.
 இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, கே.வி.இராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com