நீட் தேர்வு: நடப்பு ஆண்டிலும் ஈரோட்டில் தேர்வு மையம் இல்லை

நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டிலும் ஈரோட்டில் தேர்வு மையம் அமைக்கப்படாததால் மாணவர்கள் சேலம், நாமக்கல், கரூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. 


நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டிலும் ஈரோட்டில் தேர்வு மையம் அமைக்கப்படாததால் மாணவர்கள் சேலம், நாமக்கல், கரூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. 
2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் உள்பட 1.40 லட்சம் பேர் நடப்பு ஆண்டில் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். 
 தமிழகத்தில் கடந்த ஆண்டு 1.13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் விண்ணப்பித்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்வுக்காக கேரளத்துக்கு மகனை அழைத்துச் சென்ற தந்தை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை, சேலம், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 10 இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நடப்பு ஆண்டில் கூடுதலாக நாகர்கோயில், கரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்ட மாணவர்கள் கோவை அல்லது நாமக்கல் சென்று தேர்வு எழுதினர். அந்தச் சூழலை தவிர்க்க ஈரோட்டில் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையிலும் நடப்பு ஆண்டிலும் ஈரோட்டில் தேர்வு மையம் அமைக்கப்படவில்லை. 
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 320 பேர் இப்போது நீட் தேர்வுக்காக அரசின் இலவச பயிற்சி மையங்களில் கடந்த ஒரு மாதமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு மாவட்டத்தில் மொத்தமாக சுமார் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை மத்திய அரசு நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்ற முகமையிடம் அளித்துள்ளது.
இந்த முகமையை எவ்வாறு அணுகுவது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. இதனால், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, தேர்வு மையங்கள் விவரம் போன்றவற்றை நாங்களும் இணையத்தில் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com