மாதேஸ்வரன் கோயில் குண்டம் திருவிழா

கோபி, டி.என்.பாளையம் வனச் சரகத்தில் உள்ள  நவக்கிணறு மாதேஸ்வரன் கோயில்  குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


கோபி, டி.என்.பாளையம் வனச் சரகத்தில் உள்ள  நவக்கிணறு மாதேஸ்வரன் கோயில்  குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட புஞ்சைத்துறையம்பாளையத்தில் பிரசித்திபெற்ற நவக்கிணறு மாதேஸ்வரன் கோயில் உள்ளது. 
இந்தக் கோயில் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளதால் விழாக் காலங்களில் மட்டுமே பொதுமக்களைக் கோயிலுக்கு வனத் துறையினர் அனுமதிக்கின்றனர். 
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு இக்கோயிலில் சூரியக்குண்டம் அமைத்து தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பம்சமாக உள்ளது. மலைவாழ்மக்கள் அதிக அளவு வழிபடும் குலதெய்வமாகவும் இக்கோயில் விளங்குகிறது.  
இக்கோயில் குண்டம் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, வனப் பகுதியில் உள்ள வனத் தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து,  ஊர்வலமாக வந்த கோயில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கினர். முதலில் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து தலையில் கரக கலசத்துடன் குண்டம் இறங்கினார். 
பின்னர் 15 நாள்கள் விரதமிருந்த கோயில் வீரமக்கள், மலை வாழ்மக்கள்,  ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கைகளில் பிரம்பு , வேப்பிலை, குழந்தை போன்றவற்றை எடுத்து குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில், கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி , புஞ்சைத்துறையம்பாளையம், பங்களாபுதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
  கோயில் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளதால் டி.என்.பாளையம் வனத் துறை மற்றும் பங்களாபுதூர் காவல் துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 
வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. புஞ்சைத்துறையம்பாளையம் பொதுமக்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா மறுபூஜை யுடன் ஏப்ரல் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com