மாநகராட்சிப் பகுதியில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை: ஆணையர்

மாநகராட்சிப் பகுதியில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். 


மாநகராட்சிப் பகுதியில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். 
ஈரோட்டில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்தப் பகுதிகளை மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் செவ்வாய்க்கிழமை காலை ஆய்வு செய்தார். 
அதிகமாக மழைநீர் தேங்கும் பகுதிகள் என கண்டறியப்பட்ட 12 இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட ஆணையர் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இனிமேல் மழை பெய்யும்போது மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் ஈரோடு, வைராபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு செய்தார். அங்குப் பணிகளை விரைந்து முடிக்க அவர் உத்தரவிட்டார். 
இந்த ஆய்வு குறித்து ஆணையர் கூறியதாவது: 
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் 19 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 
அங்கு மக்கும், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டு அழிக்கப்படும். இதில் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகிறது. 30 நாள்களில் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து எடுக்கப்பட உள்ளது. அதில் விற்பனை செய்யக்கூடிய பால் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பழைய இரும்பு பொருள்கள் உள்ளிட்டவை தனியாகப் பிரித்து எடுத்து விற்கப்படும். 
மேலும் விற்க முடியாத பிளாஸ்டிக் பொருள்களை சிமென்ட் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பழைய பொருள்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை, குப்பையைத் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலமாக குப்பைகள் ஒரே இடத்தில் குவிக்கப்படுவது தடுக்கப்படும்.
வைராபாளையம் பகுதியில் 5 டன் குப்பைகளை மக்க வைக்கும் அளவுக்கு திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்படுகிறது. அங்கு ஈரோடு பேருந்து நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பொதுஇடங்களில் அதிக அளவில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு செல்லப்பட்டு மக்க வைக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் கரையோரமாக இல்லாமல், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்றார். 
ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், ஆய்வாளர் ஜாகீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com