வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: தனியார் சர்க்கரை ஆலைக்கு எச்சரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்கவில்லை என்றால்

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்கவில்லை என்றால் வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்படும் என தனியார் சர்க்கரை ஆலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா எச்சரிக்கை விடுத்தார். 
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்: 
சுபி.தளபதி: ஈரோடு மாவட்டம், வாணிப்புத்தூர் அத்தாணி பகுதிகளில் 43 கல் குவாரிகள் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், கல் குவாரிகள் செயல்பட தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ள நிலையில் எந்த அடிப்படையில் ஏல அறிவிப்பு வெளியானது என்பதை தெரிவிக்க வேண்டும்.
பிற்பட்டோர் நலத் துறை மூலம் மானியக் கடன் பெற்று நிலம் வாங்கி ஆழ்துளை கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்காமல் உள்ளனர். இதனால், வாங்கியக் கடனை திருப்பிச்செலுத்த முடியாத நிலையும், மின் மோட்டார்கள் பயன்பாடு இல்லாமலும் கிடக்கின்றன. இந்தத் திட்டத்தில் மானியக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என அரசு விதி உள்ளது. ஆனால், அதிகாரிகள் உரிய கவனம் செலுத்துவதில்லை.
கிராம ஊராட்சிகளில் உள்ள வாரச் சந்தைகளில் சுங்கம் வசூலிக்க வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பெரும்பாலன இடங்களில் சந்தைக்கான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையோரத்தில் தான் சந்தைகள் நடைபெறுகின்றன.
 மேலும் சந்தை உள்ள இடங்களில் எந்தவிதமான கட்டமைப்பு வசதியும் இல்லை. இதனால் சுங்க வசூல் அறிவிப்பை ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கிராமத்திலேயே தங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு உள்ளது. ஆனால், பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் அருகில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து தினமும் வந்து செல்கின்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
எ.ஆர்.சென்னியப்பன்: கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பல இடங்களில் கடந்த 3 மாதங்களாக மாதத்தில் 10 முதல் 15 நாள்கள் வரை பால் பணம் நிலுவையில் உள்ளது. மாதம்தோறும் பால் பணத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். 
ஆப்பக்கூடல் தனியார் சர்க்கரை ஆலையில் பல மாதங்களாக கரும்பு நிலுவைப் பணம் வழங்கப்படவில்லை. 15 நாள்களில் பணம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தும் ஆலை நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. 
ஆலை அலுவலர்: போதிய விலை இல்லாமல் சர்க்கரையை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தான் கரும்புக்கு பணம் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
 மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா: 15 நாள்களுக்கு மேல் காலதாமதம் ஏற்பட்டால் கரும்பு நிலுவைப் பணத்தை வட்டியுடன் வழங்க சம்மதமா என்பதை  ஆலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். கரும்பு கொள்முதல் செய்ததற்கான பணத்தை உடனடியாக வழங்க தவறினால் ஆலை மீது வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆலைக்கு சீல் வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com