ஈரோட்டில் நாளை ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோட்டில் முதன்முறையாக வரும் ஜனவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி

ஈரோட்டில் முதன்முறையாக வரும் ஜனவரி 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு  நடைபெற்று வந்தாலும், காளைகளுக்குப் பெயர் போன  கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஈரோட்டில்  ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்பது  இப்பகுதி மக்களின் நெடுநாள்  ஆதங்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், அதை நிறைவேற்றும் வகையில்  நடப்பாண்டில் ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அரசிடம் அனுமதி பெறப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவது அனைத்து தரப்பினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 ஈரோடு  பெருந்துறை சாலையிலுள்ள ஏஇடி பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 19)காலை 8.30 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வை மாவட்டத்தைச் சார்ந்த  அமைச்சர்கள் தொடங்கி வைக்கவுள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதல், அரசு விதிமுறைகளின்படி ஜல்லிக் கட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக  நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளும் தயார்நிலையில் உள்ளன.
சுமார் 400 காளைகள் பங்கேற்க அனுமதி கேட்டிருந்த நிலையில், 100 காளைகளுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் இதில் பங்கேற்கவுள்ளன. அத்துடன் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். 
ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் பல்லாயிரக்கணக்கில் பார்வையாளர்கள் வரக்கூடும்  என எதிர்பார்ப்பதாகவும்,  பாதுகாப்புப் பணிகளில் 600-க்கும் 
மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com