பெண்கள் மட்டுமே கொண்டாடி மகிழ்ந்த காணும் பொங்கல்...!

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் காணும் பொங்கல் விழா ஈரோட்டில் முழுக்க முழுக்க

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் காணும் பொங்கல் விழா ஈரோட்டில் முழுக்க முழுக்க பெண்களால் உற்சாகத்துடன் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 ஈரோடு பேருந்து நிலையம் அருகேயுள்ள வஉசி பூங்காவில்  ஆண்டுதோறும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழா  உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 
  இந்த ஆண்டு காணும் பொங்கலையொட்டி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் இருந்தே பெண்களின் வருகையால் ஈரோடு வஉசி பூங்கா களைகட்டத் தொடங்கியது. பெண்கள் மட்டுமே பூங்காவுக்குள் செல்ல முடியும். மேலும், இவர்களுடன் 10 வயதுக்குள்பட்ட  சிறுவர்கள்  அனுமதிக்கப்படுகின்றனர். சிறுவர், சிறுமிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரையிலும் பங்கேற்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களில் பங்கேற்று தங்களது வயதையும் மறந்து  மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தனர். இதில், ஈரோடு மாநகரைச் சார்ந்த  பெண்கள் மட்டுமின்றி பவானி, மொடக்குறிச்சி, எழுமாத்தூர், பெருந்துறை, நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம்,  குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட  பகுதிகளில் இருந்தும் வந்திருந்த  ஆயிரக்கணக்கான பெண்கள் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.  
மதியம், இரவு வேளைகளுக்கான உணவு வகைகளை வீட்டில் தயாரித்து இங்கு கொண்டுவந்து உண்பதும் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாகும். மேலும், பல்வேறு  குழுக்களாகப் பிரிந்து கும்மி, கோலாட்டம் என  தங்களுக்குப் பிடித்த பாடல்களை ஆடலுடன் பாடி மகிழ்ந்தனர். மேலும்,  சில இளம் பெண்கள்  வாத்தியக் கருவிகளுடன் இசைத்து பாடியதைப் பார்க்க முடிந்தது. 
வயதானவர்கள் தங்களுக்குள் கதை பேச, நடுத்தர வயதினரும், சிறுமியரும் ஆசை தீர ஊஞ்சல் ஆடுவது உள்ளிட்ட விளையாட்டுகளில் திளைக்க, இளம் பெண்களோ அதிரவைக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனமாடியது போன்ற கொண்டாட்டங்களால் காணும் பொங்கல் விழா களைகட்டியது.
இதுகுறித்து, விழாவில் பங்கேற்ற  பெண்கள் கூறியதாவது:
ஆண்டு முழுவதும் வீட்டு வேலைகளை செய்தும், வெளியில் பணிக்கு சென்றும் சோர்ந்திருக்கும் எங்களுக்கு, இந்த காணும் பொங்கல்  விழா சோர்வைப் போக்கி கவலைகளையும் மறக்க உதவுகிறது. வயது வித்தியாசமின்றி, கூச்சத்தை மறந்து ஆடிப்பாடி மகிழ்கிறோம். 
இந்த நாளுக்காக ஆண்டு முழுவதும் காத்திருந்து இங்கு வருவதால்  உற்சாகத்துக்கு அளவே இல்லை. கிராமங்களில், "பூப்பறிக்க வர்றீங்களா' என்ற பெயரில் கிராமப் பெண்கள் ஒன்றுகூடி கும்மிப்பாட்டு, கோலாட்டம் ஆடி, சமைத்துக் கொண்டுவந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்பது வழக்கம். அதேபோல், நகர்ப் பகுதியில் விழா எடுத்துக் கொண்டாட  பெண்களுக்காகவே இந்தப் பூங்காவை ஒதுக்கி இருப்பது வரவேற்புக்குரியது.  20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல்  கொண்டாடப்படுவது ஈரோட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com