சாலையில் கிடந்த 32 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

உடுமலையில் சாலையில் கிடந்த 32 பவுன் நகையை எடுத்து நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உடுமலையில் சாலையில் கிடந்த 32 பவுன் நகையை எடுத்து நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை, பூமாலை செட்டியார் சந்தில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி லட்சுமிபிரியா. கடந்த திங்கள்கிழமை சரணவன் குடும்பத்தாருடன் திருப்பூரில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமணத்துக்கு காரில் சென்றுள்ளார். 
பின்னர் உடுமலை திரும்பிய சரவணன், தளி சாலையில் காரை நிறுத்தி உடன்வந்த உறவினர்களை இறக்கி விட்டுள்ளார். அப்போது, சரவணனின் மனைவி லட்சுமிபிரியா வைத்திருந்த நகைப்பை சாலையில் தவறி விழுந்துவிட்டது.
வீடு திரும்பிய சரவணனும், லட்சுமிபிரியாவும் நகைப்பை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து உடுமலை காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை புகார் கொடுக்கச் சென்ற சரவணனிடம் நகைகளின் விவரம் குறித்து போலீஸார் விசாரித்தனர். 
விசாரணைக்குப் பிறகு திகைப்பூட்டும் விதமாக, சரவணன், மனைவி லட்சுமிபிரியா தம்பதியிடம் அவர்கள் தொலைத்த நகைப்பையை போலீஸார் ஒப்படைத்தனர். அதைக் கண்டதும் அந்த தம்பதி வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
உடுமலை, சிவசக்தி காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன்,  திங்கள்கிழமை தளி சாலையில் கிடந்த பையை எடுத்துவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில் தங்க நகைகள் இருந்தன. 
அதேசமயம், நகைகளைத் தொலைத்த சரவணன்- லட்சுமிபிரியா தம்பதி செவ்வாய்க்கிழமை புகார் அளிக்க வந்திருந்தனர். உடுமலை, தளி சாலையில் காரில் செல்லும்போது நகைப்பையைத் தொலைத்து விட்டதாகவும், அதில் 32 பவுன் நகைகள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  நகைகளின் அடையாளங்கள் குறித்து அந்தத் தம்பதி தெரிவித்த விவரங்கள் உண்மையாக இருந்ததால், அவர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன என்று தெரிவித்தனர்.
சாலையில் கிடந்த நகைகளை எடுத்து வந்து நேர்மையாக ஒப்படைந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனுக்குப் பரிசு வழங்கி காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ், உதவி ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர். ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com