கேரட் அறுவடை செய்யும் நேரம் மாற்றம்:  நள்ளிரவுக்கு பதில் காலை 6 மணிக்கு தொடங்கும்

நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிர் அறுவடை செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இனிமேல் நள்ளிரவுக்கு பதில்

நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிர் அறுவடை செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இனிமேல் நள்ளிரவுக்கு பதில் காலை 6 மணிக்கு பிறகே அறுவடை செய்யப்படும் என  உதகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், இதர துறைகளைச் சேர்ந்தோர், விவசாய சங்க பிரதிநிதிகள்,  விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்.  
கூட்டத்தின் தொடக்கத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டிருந்த 23 கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு டீசல் என்ஜின் வழங்குவது தொடர்பாக  அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  அரசிடமிருந்து உரிய ஆணை மற்றும் நிதி ஒதுக்கீடு  எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
மேலும் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி பண்ணைக் குட்டை  அமைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.75,000 வழங்கப்பட்டு வருவதாகவும்,  குறைவான அளவில் பண்ணைக் குட்டை அமைத்துள்ள விவசாயிகளுக்காக அவர்களது தோட்டங்களில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஆய்வு மேற்கொண்டு பண்ணைக் குட்டை  அமைக்கப்பட்டுள்ள அளவுக்கு ஏற்ப மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் கேரட் அறுவடை செய்யும் நேரம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் நள்ளிரவு நேரத்துக்குப் பதிலாக காலை 6 மணிக்கு பின்னரே தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து வேளாண்மை  பொறியியல் துறையின் மூலம் நுண்ணீர் பாசனத் திட்டம் தொடர்பாக  விரிவான செயல் விளக்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு  எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் விவசாயிகளின் பொது கோரிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com