உதகை தோடர்களின் எம்பிராய்டரி கலைக்கு புவிசார் குறியீடு

உதகையில் பழங்குடியின மக்களான தோடர்களின் பாரம்பரிய எம்பிராய்டரி கலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

உதகையில் பழங்குடியின மக்களான தோடர்களின் பாரம்பரிய எம்பிராய்டரி கலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  மத்திய அரசின் கைவினைப்பொருள் ஆணையகம் தில்லியை மையமாகக் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கைவினைக் கலைஞர்களுக்கு அவர்களது தொழில், வாழ்க்கைத் தரத்தை  மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  இதில், சேலத்திலுள்ள களப்பணி அலுவலகத்தின் மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்களிலுள்ள கைவினைஞர்களுக்கு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. நீலகிரியின் பூர்வீகக் குடிகளான தோடரினத்தாரின் கைவினைப் பொருள்கள் தொடர்பான பயிற்சி முகாம் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 இதில், கைவினைப் பொருள்கள் ஆணையகத்தின் மண்டல இயக்குநர் பி.மல்லிகார்ஜுனையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:
  இந்தியாவிலிருந்து 330 வகையான கைவினைப் பொருள்களின் மூலம்  ஆண்டுதோறும் ரூ. 30,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளன. கைனைப் பொருள்களின் தரத்தை மேலும் உயர்த்தினால் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் பாரம்பரிய கலைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ்  கூடுதலான  உதவி வழங்கப்படுகிறது என்றார்.
  இதில்,  நீலகிரி மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குநர் ஜெயராமன் பேசியதாவது:
  நீலகிரி மாவட்டத்திலுள்ள தோடர் இனத்தாரின் எம்பிராய்டரி கலை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளதாகும்.  இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதன்  மூலம் தோடர்களின் பாரம்பரியமும், பண்பாடும் பாதுகாக்கப்படும்.  நுண்கடன் திட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில் வங்கிகளின்  மூலம் தேவையான  கடனுதவி வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இக்கடனுதவி தொகை  மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
  கைவினைப் பொருள்கள்ஆணையகத்தின் சிறப்பு அலுவலர் சஞ்சய் காந்தி பேசியதாவது:
  நீலகிரி மாவட்டடத்திலுள்ள தோடர்களின் எம்பிராய்டரி கலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாற்போல தமிழகம் கைவினைப் பொருள்களிலும், கலைத் திறனிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கைவினைப் பொருள்களுக்கான கலையை ஊக்குவிக்கும் வகையில் பூம்புகாருடன் இணைந்து பல்வேறு  புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றார்.    முகாமுக்கான ஏற்பாடுகளை கைவினைப் பொருள்கள்  சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஸ்ரீலட்சுமி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com