கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு குறைந்த விலை நிர்ணயம்

குந்தா பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு குறைந்த

குந்தா பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
குந்தா பகுதியில் மஞ்சூர், குந்தா (எடக்காடு), பிக்கட்டி, கிண்ணக்கொரை, இத்தலாறு, மேற்குநாடு, மகாலிங்கா, நஞ்சநாடு, கைகாட்டி ஆகிய 9 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 
இவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைகளை இந்தத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து இம்மாதம் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கான விலையை நிர்ணயம் செய்து கூட்டுறவுத் தொழிற்சாலைகள் அறிவித்துள்ளன. 
அதன்படி, கைகாட்டி கூட்டுறவு தொழிற்சாலையைத் தவிர்த்து, மஞ்சூர் உள்பட பிற தொழிற்சாலைகள் அனைத்திலும் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 12 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
கைகாட்டி கூட்டுறவுத் தொழிற்சாலையில் கிலோவுக்கு ரூ. 14.50 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் குந்தா பகுதியில் உள்ள மற்ற தொழிற்சாலைகளில் கிலோவுக்கு ரூ. 2.50 குறைவாக அறிவித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 
இதுகுறித்து, மஞ்சூர்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை உறுப்பினரும், பிரதிநிதியுமான ராதாகிருண்ஷ்ணன் கூறியதாவது: 
குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் மட்டுமே பிரதானத் தொழிலாக உள்ளது. குந்தா பகுதியில் உள்ள கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. 
இந்த விலையைக் கொண்டு தொழிலாளர்களுக்கு கூலி வழங்கவே இயலாத நிலையில், தோட்டப் பராமரிப்பு மட்டுமின்றி விவசாயிகளின் அன்றாடச் செலவினங்களிலும் கடும் பாதிப்பு ஏற்படும். 
பெரும்பாலான கூட்டுறவுத் தொழிற்சாலைகள் லாபத்தில் இயங்குவதாக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், பசுந்தேயிலைக்கு விலையைக் குறைத்து நிர்ணயம் செய்திருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். 
எனவே, விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே அறிவித்த விலையை திரும்பப் பெற்று, பசுந்தேயிலைக்கு கூடுதலாக விலை வழங்க இன்ட்கோ சர்வ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com