தெங்குமரஹாடா கிராமத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம் தொடக்கம்

தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிடத் தொடக்கப்

தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளியில்  கூட்டுப் பண்ணைய திட்டம் மற்றும் நுண்ணீர்ப் பாசனத் திட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
 நீலகிரி மாவட்டத்தில், தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இணைந்து நடத்திய கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் நுண்ணீர்ப் பாசனத் திட்ட விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்  திவ்யா செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
நீலகிரி மாவட்டம், இயற்கையும், பசுமையும் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பது விவசாயம்தான். அதனால் விவசாயிகள், மருந்துகள் மூலமாக விவசாயம் செய்வதைக் கைவிட்டு, இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய செலவும் மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருப்பதால் அனைவரும் இயற்கை விவசாயம் செய்து பயனடைய வேண்டும். மேலும், வருங்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே, அனைவரும் தங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, அவர்கள் நல்ல நிலையை அடைந்து, அவரவர் குடும்பத்தினருக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார். 
 இதைத் தொடர்ந்து,  அப்பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, அங்குள்ள மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். 
கல்லம்பாளையம் மற்றும் அல்லிமாயாறு பகுதிகளில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆழ்துளைக் கிணற்றின் செயல்பாட்டைத் தொடக்கிவைத்தார்.
 அப்போது, இவை விவசாயிகளின் பாசன வசதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், 2017-18ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 27 பணிகளில் ரூ. 25 லட்சம்  மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும்,  நடப்பு ஆண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 37 லட்சம்  மதிப்பில் 11 பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ஒரு பழங்குடியினப் பயனாளிக்கு செங்கல் சூளை வைப்பதற்காக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர்ப் பாசனக் கருவிகள், உழவன் செயலி மற்றும் மானியத் திட்டக் கையேட்டையும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிடத் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் எழுது பொருள்களையும், காவல் துறை சார்பாக விளையாட்டு உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ்,  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் காசிநாதன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மீராபாய், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டச் செயற்பொறியாளர் பசுபதி, கோத்தகிரி வட்டாட்சியர் ரவிகுமார் ஆகியோருடன் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com