எமரால்டு அரசு மருத்துவமனை பணி டிசம்பரில் நிறைவடையும்: அதிகாரிகள் தகவல்

மஞ்சூர் அருகே எமரால்டில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின்  கட்டுமானப் பணிகள் டிசம்பர் இறுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மஞ்சூர் அருகே எமரால்டில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின்  கட்டுமானப் பணிகள் டிசம்பர் இறுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு கிராமத்தைச் சுற்றி அட்டுபாயில், அண்ணா நகர், எமரால்டு வேலி, சுரேந்திர நகர், பேலிதளா, கோத்தகண்டிமட்டம், நேரு நகர், நேரு கண்டி, லாரன்ஸ், காந்தி கண்டி, அவலாஞ்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.
 இந்த  கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் வசித்து வருபவர்களில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சைக்காக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதகைக்கு சென்று வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், ஏற்படும் காலதாமதத்தால் இப்பகுதிகள் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதுடன், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
 இதனைக் கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் 50 படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்ட சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ரூ.18 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கியது. 
 இதைத் தொடர்ந்து எமரால்டு காவல் நிலையம் பின்புறம் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதியுடன் இ.சி.ஜி., எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை மையம், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனித்தனி வார்டுகள், வாகன நிறுத்துமிடம், பிணவறை உள்பட பல்வேறு வசதிகளுடன் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com