குன்னூர் ஏல மையத்தின் ஜனவரி மாத வருமானம் ரூ.55.76 கோடி: சர்வதேச மேலாண்மை ஆலோசகர் தகவல்

குன்னூர் ஏல மையத்தின் ஜனவரி மாத வருமானம் ரூ.55.76 கோடி என சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ். சுந்தர் தெரிவித்துள்ளார்.

குன்னூர் ஏல மையத்தின் ஜனவரி மாத வருமானம் ரூ.55.76 கோடி என சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ். சுந்தர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடத்தப்படுகின்றன. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத் தூளை ஏலம் எடுக்கிறார்கள். இந் நிலையில் குன்னூர் தேயிலை ஏல மையத்தின் கடந்த ஜனவரி மாத வருமானம் ரூ.55 கோடியே 76 லட்சமாக உயர்ந்துள்ளது. 
இதுகுறித்து சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:
இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத் தூளின் சராசரி விலை கிலோ ரூ.99.92 பைசா என கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேயிலைத் தூளின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.88. 79 பைசாவாக இருந்தது. இதைக் கணக்கிடும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தேயிலைத் தூளுக்கு சராசரி விலை 11 ரூபாய் 13 பைசா உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் கூடுதல் விலைக்கு அதிக தேயிலைத் தூளை வர்த்தகர்கள் வாங்கியது தான்.
 கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 4 ஏலங்கள் நடைபெற்றன. அதில் 56 லட்சத்து 3 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 45 லட்சத்து 18 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் மட்டுமே விற்பனையாகியது.
வட மாநிலங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் தேயிலை உற்பத்தியை நிறுத்த தேயிலை வாரியம் அறிவுறுத்தியது. ஏனெனில் வட இந்தியாவில் குளிர்காலத்தில் தரமான தேயிலை உற்பத்தி செய்யப்படுவது இல்லை.
 கடந்த 2 ஆண்டுகளாக அங்கு அதிக அளவு சிறு தேயிலை தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, தரம் குறைந்த தேயிலைத் தூள் குளிர்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் சந்தையில் தேயிலைத் தூள் விலை குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு முதல்முறையாக குளிர்காலத்தில் வட இந்தியாவில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூட தேயிலை வாரியம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் வடமாநில தேயிலை வர்த்தகர்களின் கவனம் குன்னூர் ஏல மையம் பக்கம் திரும்பியது. இதனால் குன்னூர் ஏல மையத்தில் ஆரோக்கியமான போட்டி நிலவியது.
இதன் காரணமாக தேயிலைத் தூளின் விலை உயர்ந்து 10 லட்சத்து 85 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் கூடுதலாக விற்பனையானது. அதிக அளவு தேயிலைத் தூளை அதிக விலை கொடுத்து வர்த்தகர்கள் வாங்கியதால் குன்னூர் ஏல மையத்தில் கடந்த ஜனவரி மாத மொத்த வருமானமும் உயர்ந்தது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் குன்னூர் தேயிலை ஏல மையத்தின் மொத்த வருமானம் ரூ.55 கோடியே 76 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.40 கோடியே 12 லட்சம் மொத்த வருமானமாக கிடைத்தது. இதனை வைத்துப் பார்க்கும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.15 கோடியே 67 லட்சம் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. இது 39.06 சதவீத வளர்ச்சி ஆகும் என தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com