தமிழகத்தில் வெளி மாநில காளான் விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை

தமிழகத்தில் வெளி மாநில காளான் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீலகிரி சிறு காளான்

தமிழகத்தில் வெளி மாநில காளான் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீலகிரி சிறு காளான் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இச்சங்கத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் செயலர் வினோத், பொருளர் இப்ராஹிம், துணை செயலர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 பின்னர் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காளான்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காளான்கள் ஆகும். ஆனால்,  சமவெளிப் பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலான வெப்பநிலையிலேயே காளான் உற்பத்தி செய்யப்பட்டு குளிர் சாதன வண்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, விற்பனை நிலையகங்களிலும் குளிர் சாதனப் பெட்டிகளில் இருந்தே விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், நீலகிரியில் காளான் இயற்கை  முறையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு பொது வாகனங்களில் சமவெளிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நீலகிரி காளான்கள் இரண்டு நாள்கள் வரையிலும் கெட்டுப்போவதில்லை. 
ஆனால், வெளி மாநில காளான்கள் குளிர் சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்த சில மணி நேரங்களிலேயே கெட்டுவிடுகிறது. ஆகவே, நீலகிரி காளானுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
மேலும், காளான் உற்பத்திக்கு என வேளாண்மைத் துறையால்  நீலகிரி மாவட்டத்தில் தனியாக விதை  உற்பத்தி மையம் மற்றும் உர விநியோக மையம் தொடங்கப்பட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் காளான்களுக்கு சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும்.
அத்துடன் காளானை பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே அடைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் பிளாஸ்டிக் தடையில் இருந்து காளான்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com