மக்களவைத் தேர்தல்: உதகையில் நான்கு மாநில காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத்  தேர்தலை முன்னிட்டு தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.


மக்களவைத்  தேர்தலை முன்னிட்டு தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் காவல் துறை அதிகாரிகள், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை ஆணையர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக காவல் துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், கேரள காவல் துறைத் தலைவர்  லோக்நாத் பெஹெராஹ்ரா,  புதுச்சேரி  காவல் துறைத் தலைவர் சுந்தரி நந்தா ஆகியோருடன்  4 மாநிலங்களின் காவல் துறை உயர் அதிகாரிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மக்களவைத் தேர்தல் சம்பந்தமான பொதுவான பிரச்னைகள், மாநிலங்களுக்கு இடையேயான போதைப் பொருள்கள் கடத்தல், அண்டை மாவட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, எல்லையோர சோதனைச் சாவடிகளைப் பலப்படுத்துதல், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி மது கடத்தலைத் தடுத்தல், நிலுவையில் உள்ள பிடியாணைகளை நிறைவேற்ற சிறப்பு முயற்சி எடுத்தல்,  ஆயுதங்கள், வெடிபொருள்களின் புழக்கத்தைத் தீவிரமாகக் கண்காணித்தல், 
மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தைக் கண்காணித்தல், மத்தியப் படைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. 
ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கர்நாடக காவல் துறை அதிகாரி ஹிதேந்திரா,  கேரள மாநில ஐ.ஜி. தினேந்திர காஷ்யப்,  தமிழக சட்டம் ஒழுங்கு  கூடுதல் காவல் துறை இயக்குநர் விஜயகுமார்,  சிறப்பு இலக்குப் படை இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோர்,  நுண்ணறிவுப் பிரிவு காவல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி,  மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா,  தெற்கு மண்டல காவல் துறைத் தலைவர்  சண்முக ராஜேஷ்வரன், காவல் துறையின் தேர்தல் பொறுப்பு அதிகாரி  சேஷசாயி,  அண்டை மாநில, மாவட்ட காவல் துறை துணைத் தலைவர்கள்,  காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். 
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையொட்டி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நுண்ணறிவுப் பிரிவு,  போக்குவரத்துப் பிரிவு காவல் அதிகாரிகள் உதகையில் வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே  பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சந்தேகத்திற்கிடமான, சர்ச்சைக்குள்ளான இடங்களில் விடியவிடிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ரோந்துப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com