நுண்கடன் என்ற பெயரில் கந்துவட்டி: மகளிர் குழுவினர் புகார்

நீலகிரியில் நுண்கடன் என்ற பெயரில் நவீன கந்துவட்டி நிறுவனங்களால் மகளிர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்

நீலகிரியில் நுண்கடன் என்ற பெயரில் நவீன கந்துவட்டி நிறுவனங்களால் மகளிர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என உதகை  பொருளாதார குற்றப் பிரிவில் குன்னூர் அருகில்  உள்ள எடப்பள்ளியைச் சேர்ந்த மகளிர் குழுவினர் புகார் கொடுத்துள்ளனர்.
நீலகிரியில் தேயிலை விலை சரிவு, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றால் பொருளாதாரரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி, மகளிர் சுய உதவிக் குழுக்களை இலக்காக வைத்து புற்றீசல்போல் அதிகரித்துள்ள "மைக்ரோ' பைனான்ஸ் நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்றன.
குழு பொறுப்பின் பெயரில், 4 சதவீதம் வரை வட்டி என அறிவிக்கப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. இதில், சேவை செலவு என்ற பெயரில், ரூ.500 தனியாக எடுத்துக் கொள்வதுடன், ரூ.10 ஆயிரம் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,375 வீதம், 10 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்படுகிறது.
மேலும், அரசுத் திட்டங்களின் பெயரை வைத்து, மகளிர் மேம்பாட்டுக்காக சேவை செய்வதாகக் கூறி குன்னூரில் இந்த நுண்கடன்களை அரசே வழங்குவதைப் போன்ற தோற்றத்தை சில நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன. கடனுக்கு "செக்' வாங்க க் கூடாது என்ற விதிமுறை இருந்தும் கடன் வாங்கும் பெண்களிடம் காசோலை பெறப்படுகிறது.
இது குறித்து மக்கள் சேவை மைய செயலாளர் ஆல்தொரை கூறியதாவது: மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் விதிகளை மீறி கூட்டு வட்டி வசூலிக்கின்றன. ஒருவர் குறிப்பிட்ட தேதியில் கட்ட முடியாவிட்டால், மற்றவர்கள் கட்ட நிர்பந்தம் செய்வதால், மகளிருக்குள் சண்டை ஏற்படுகிறது. காசோலைகளை வைத்து வழக்கு தொடுப்பதாக மிரட்டப்படுகின்றனர்.
10 மாதத்துக்கான வட்டியைக் கணக்கிட்டால், 37.5 சதவீதம் ஆகிறது. கடைசி மாதத்தில், 1000 ரூபாய்க்கு வட்டியாக, 37.50 மட்டும் கட்ட வேண்டிய நிலையில், 375 ரூபாய் என நவீன கந்து வட்டியை வசூலித்து மகளிர் ஏமாற்றப்படுகின்றனர். 
இது குறித்து எடப்பள்ளி  மகளிர் குழுக்கள் உதகை  பொருளாதார குற்றப் பிரிவில் புகார் கொடுத்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com