காங்கயத்தில் 174 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள்

தமிழக அரசின் சார்பில் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா காங்கயத்தில்

தமிழக அரசின் சார்பில் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமை வகித்தார். இதில் 174 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான மானிய விலை அம்மா இரு சக்கர வாகனங்களை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கிப் பேசியதாவது: 
மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னால் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தியுள்ளார். மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர்,  ஆதாரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தானியங்கி கியருடன் கூடிய இரு சக்கர வாகன விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில் மற்றும் காங்கயம் நகராட்சிகள், முத்தூர் பேரூராட்சி, வெள்ளக்கோவில், குண்டடம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 174 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானிய விலையில் ரூ.43 லட்சம் மதிப்பிலான  அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு, மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார் (பொறுப்பு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com