உடுமலை வனப் பகுதிகளில் நக்ஸல்கள் நடமாட்டம்?  எஸ்பி ஆய்வு

உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள மலைக்கிராமங்களில் நக்ஸல்கள் நடமாட்டம்

உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள மலைக்கிராமங்களில் நக்ஸல்கள் நடமாட்டம் இருப்பதாக எழுந்துள்ளப் புகாரை அடுத்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலையில் இருந்து தெற்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே 15- க்கும் மேற்பட்ட செட்டில்மெண்டுகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தமிழக வனப் பகுதிக்கு உள்பட்ட குழிப்பட்டி, குருமலை, ஆட்டுமலை, கோடந்தூர் ஆகிய மலைக்கிராமங்களில் சந்தனக் கட்டைகளை கடத்தும் நபர்கள் வந்துபோவதாக வந்த புகாரை அடுத்து இந்த மலைக்கிராமங்களில் உளவுத் துறையினர் ஆண்டு முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலைக் கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் ஆயுதங்களுடன் நடமாடி வருவதை மலைவாழ் மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் வந்தது. இதைத் தொட ர்ந்து, திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கயல்விழி தலைமையில் நக்ஸல் தடுப்பு பிரிவு போலீஸார் மலைக் கிராமங்களில் உள்ள வனப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். அப்போது மலைவாழ் மக்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த ஆய்வின்போது உடுமலை டிஎஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அமராவதி நகர்  போலீஸார் உடன் சென்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
தமிழக-கேரள எல்லையில் உள்ள மலைக்கிராமங்களில் நடமாடும் மர்ம நபர்கள் நக்ஸல்களா? அல்லது விலங்குகளை வேட்டையாட வந்த நபர்களா? அல்லது சந்தனக்கட்டைகளை கடத்தும் நபர்களா?  என விசாரணை நடைபெற்று வருகிறது.  ஆனாலும் தமிழக-கேரள எல்லையில் உள்ள  மலைக்கிராமங்கள் தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com