தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.    
கூட்டத்துக்கு,  மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
டெங்கு தடுப்பு பணிகளை சம்பந்தப்பட்ட  அலுவலர்கள் மேற்பார்வையிட்டு கொசு உற்பத்தி ஆகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழிக்க நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும். குடிநீரில் குளோரின் அளவினை ஆய்வு செய்து குளோரின் கலந்த குடிநீரை வழங்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசு, தனியார் மருத்துவமனையில் பெற்று அவர்கள் வசிக்கும் இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும்  மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தால் மாநகராட்சி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
கொசுக்களைக் கட்டுப்படுத்த அனைத்து வீடுகளிலும் கொசுப் புகை மருந்து அடிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். 
  மேலும், மாநகராட்சிப் பகுதியில் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே மேலாண்மை செய்ய அதற்கான நுண் உரமாக்கும் மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அனைத்து  பூங்காக்கள் மற்றும் 100 கிலோவுக்கு அதிகமாக குப்பைகள் சேகரமாகும்  இடங்களில் உரமாக்கும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து  வழங்க வேண்டும். தனி நபர் கழிவறை கட்டும் திட்டத்தினை உடனடியாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் வெள்ள நிவாரண பணிகள், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், ஆகியவற்றை சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். 
இக்கூட்டத்தில், மாநகர் நல அலுவலர் மருத்துவர் கே.பூபதி,  மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மருத்துவ அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அனைத்து உதவி பொறியாளர்கள், குழாய்  ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள்,  தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள்  பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com