18 நவம்பர் 2018

எம்.எல்.ஏ. அலுவலகம் மீது கல்வீச்சு வழக்கு: ஆஜராகாத ஆய்வாளருக்கு பிடியாணை

DIN | Published: 12th September 2018 01:28 AM

அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் ஆஜராகாத ஆய்வாளர் கமலக்கண்ணனுக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக அரசுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் பேச முயன்றார். அப்போது அவரைப் பேச அனுமதிக்காத பேரவைத் தலைவர் ப.தனபாலைக் கண்டித்து அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தின் மீது திமுகவைச் சேர்ந்த ஹரிதாஸ் (எ) சம்பத், மணிகண்டன், சிவபிரகாஷ், திராவிட வசந்தன் ஆகியோர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். 
இதையடுத்து, அப்போது, அவிநாசி காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய கமலக்கண்ணன், பொதுச் சொத்துகளுக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். 
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில், விசாரணை அதிகாரியான ஆய்வாளர் கமலக்கண்ணன் செப்டம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவர் வழக்கு விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆய்வாளர் கமலக்கண்ணன் அப்போதும் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஆய்வாளர் கமலக்கண்ணனுக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். ஆய்வாளர் கமலக்கண்ணன் தற்போது உதகை நகரக் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from the section

நவம்பர் 19 மின்தடை: ஓலப்பாளையம்
சேதமான சாலைகளால் அவதியுறும் பொதுமக்கள்
கார் - இருசக்கர வாகனம் மோதல்: இரு இளைஞர்கள் சாவு
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை
காங்கயத்தில் 174 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள்