சனிக்கிழமை 15 டிசம்பர் 2018

வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. மனு

DIN | Published: 18th September 2018 08:07 AM

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கேட்டு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுடன் வந்து மனு அளித்தார். 
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில்  திங்கள்கிழமை நடைபெற்றது.இதில், திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் என் .சேகர் மற்றும்  திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்தனர்.
அது குறித்து, சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் கூறியதாவது: 
திருப்பூர், பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களாக 200க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 1999ஆம் ஆண்டு பலகட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அரசு அவர்களுக்குப் பட்டா வழங்க முயற்சி எடுத்தது. 
ஆனால், அந்த இடத்தில் ஏற்கெனவே அரசிடம் விவசாயத்துக்காகப் பட்டா பெற்று அதை வீட்டுமனைகளாக விற்க முயற்சித்தற்காக பட்டாவை ரத்து செய்த நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 
ஆனால், அவர்கள் தற்போது வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி அரசு இன்னும் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. 
இதை மாநில அரசின் கவனத்துக்கு மாவட்டம் நிர்வாகம் கொண்டு செல்ல வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 
இதற்காக சென்னை சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்திக்கவும் தயாராக  உள்ளோம் என்றார்.   
ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் செட்டிக்குட்டை ஊராட்சிப் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: 
எங்கள் பகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்புமும் பிரதானத் தொழிலாகும். சொற்ப வருவாய்தான் கிடைத்து வந்தது. 
இந்நிலையில், எங்களது வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில் மேட்டுவலவு கிராமத்தின் மையப் பகுதியில் இரும்பு உருக்குத் தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானத்துக்குத் தேவையான தண்ணீரையும் அங்குள்ள தோட்டத்தின் ஆழ்துளைக் கிணறு மூலமாகவே பெற்று வருகிறோம். 
இந்நிலையில், தொழிற்சாலை உற்பத்தியை தொடங்கும்பட்சத்தில் அங்கிருந்து வெளியேறும் நச்சுவாயுக்கள் மற்றும் புகையினால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணும், நீரும் கெடும். 
தொழிற்சாலைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும்பட்சத்தில் எங்கள் பகுதியின் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கும். இதன்மூலமாக செட்டிகுட்டை, கணபதிபாளையம், தேரணவாவி, கெட்டிச்செவியூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.  எனவே, தொழிற்சாலையை கட்டுமானப் பணியை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி ஆலையை உடனடியாக மூட வேண்டும்.  
மேற்குப்பதி கிராம மக்கள் அளித்து மனு: 
எங்கள் கிராமத்தில்  ஒரு மாத காலமாக குடிநீர் வருவதில்லை.  கடந்த ஒரு மாதகாலமாக குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வருவதில்லை. இதனால் குடிப்பதற்குத் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். எனவே, எங்கள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துதர வேண்டும்.
 

More from the section

கோயில் நிலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பால் பண்ணை கட்டுமானப் பணி: இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் புகார்
குத்துச்சண்டை போட்டி: தாமரை மெட்ரிக். பள்ளி மூன்றாமிடம்
அரசுப் பள்ளியில் 940 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பை வழங்கும் நிகழ்ச்சி
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்