பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக காரணமல்ல

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக காரணமல்ல என அக்கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக காரணமல்ல என அக்கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  திங்கள்கிழமை இரவு திருப்பூரில்  நடைபெற்ற மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர்  இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வளர்ச்சிக்கு மறுபெயர் நரேந்திர மோடி என்பதால் இதைத் தனி நபர் பிறந்த நாளாக நாங்கள் நினைக்கவில்லை. எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 40 ஆண்டுகாலம் காங்கிரஸ் அரசு செய்த தவறுகளைச் சரிசெய்து 4 ஆண்டுகளில் மோடி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். 
2019ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்பதைவிடக் கடந்த முறை வெற்றி வாய்ப்பு கிடைக்காத இடங்களிலும் வெற்றி பெறுவோம். 
தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியின்போது ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிருபர் அல்லாத ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு செய்ததால் அவரைக் கட்சியினர் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம். 
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குத் தற்போதைய பாஜக அரசு காரணமல்ல என்றாலும்கூட மக்கள் நலன் கருதி விலையைக் குறைப்பதற்கு சிறப்பு அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  
காங்கிரஸ் அரசு செய்த தவறால் ஏற்பட்ட ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் கோடி  கடன் கிட்டத்தட்ட அடைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்துதான் பாஜக போட்டியிடும் . அது யாருடன் என எதிர்காலத்தில் முடிவெடுப்போம். தற்போதுவரை அனைத்துக் கட்சிகளையும் சம தூரத்தில்தான் வைத்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com