உடுமலை அருகே கோமாரி நோய் தாக்கி 10 மாடுகள் இறந்ததாக விவசாயிகள் புகார்: கால்நடைத் துறை உதவி இயக்குநர் மறுப்பு

உடுமலை அருகே கோமாரி நோய் தாக்கி 10 மாடுகள் இறந்ததாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடுமலை அருகே கோமாரி நோய் தாக்கி 10 மாடுகள் இறந்ததாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மாடுகள் உயிரிழப்புக்கு கோமாரி நோய் தாக்குதல் காரணம் அல்ல என கால்நடை துறை உதவி இயக்குநர் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
உடுமலை வட்டம், தேவனூர்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டியூர், தேவனூர் புதார், பருத்தியூர், இராவணாபுரம்,  செல்லம்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் ஆண்டியூர் கிராமத்தில் விவசாயி கனகராஜுக்குச் சொந்தமான மாடு கோமாரி நோய் தாக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. தகவலறிந்த உடுமலை கால்நடை உதவி இயக்குநர் ரகுநாதன் மருத்துவக் குழுவினருடன் சென்று இந்த கிராமங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார். 
இந்நிலையில் கோமாரி நோய் தாக்கி தேவனூர்புதூரில் நல்லமுத்துவுக்குச் சொந்தமான 2 மாடுகளும், இராவணாபுரத்தில் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான 3 மாடுகளும், பருத்தியூரில் திருமூர்த்திக்குச் சொந்தமான 5 மாடுகளும் புதன்கிழமை திடீரென உயிரிழந்தன.  கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் கூறியதாவது:
நான் 10 காங்கயம் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் எனது மாடுகளுக்கு தடுப்பூசி போட்டேன். இந்நிலையில் எனது 5 மாடுகளுக்கு வாய் சப்பை நோய் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு மாடு உயிரிழந்து விட்டது. காலாவதியான ஊசி மற்றும் மருந்துகளை கால்நடைத் துறை அதிகாரிகள் கொடுத்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடைத் துறைக்கு தகவல் தெரிவித்தால் அதிகாரிகள் எனது தொலை பேசியை எடுக்கவில்லை. தற்போது தனியார் மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கி மற்ற மாடுகளை காப்பாற்றி வருகிறேன் என்றார்.
இதுகுறித்து கால்நடை துறை உதவி இயக்குநர் ரகுநாதன் கூறியதாவது:
ஆண்டியூர் கிராமத்தில் கோமாரி நோய் தாக்குதல் எனக் கூறப்பட்ட மாடுகளை ஆய்வு செய்தோம். மாடுகள் உயிரிழப்புக்கு கோமாரி நோய் தாக்குதல் எனக் கூறப்படுவது உண்மை அல்ல. விவசாயிகள் மாடுகளை சந்தையில் வாங்கி வந்துள்ளனர். ஆகையால் மாடுகள் உயிரிழப்புக்கு வேறு காரணங்கள் உள்ளன. ஆகஸ்ட் 28ஆம் தேதி மாடுகளுக்கு தடுப்பூசி போ டப்பட்டுள்ளது. பொதுவாக தடுப்பூசி போட்ட மாடுகளுக்கு 21 நாள்களுக்குப் பிறகே எதிர்ப்பு சக்தி வரும். ஆகையால் ஊசியில் பிரச்னை என்பது சரியான காரணம் அல்ல. தற்போது புகார் கூறப்பட்ட கிராமங்களில் கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது என்றார்.
இந்நிலையில் உடுமலையின் மேற்கு கிராமங்களில் உள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதும், 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com