காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் உரக் கிடங்கு அமைக்கப்படும்: வட்டாட்சியர் தகவல்

காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் குப்பை மூலம் தயாரிக்கவுள்ள உரக் கிடங்கு கட்ட அனுதிக்கக் கூடாது என

காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் குப்பை மூலம் தயாரிக்கவுள்ள உரக் கிடங்கு கட்ட அனுதிக்கக் கூடாது என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், குறிப்பிட்ட இடத்தில் உரக் கிடங்கு கட்டப்படும் என காங்கயம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் குப்பைக் கிடங்கு அமைத்து, அதில் உரம் தயாரிப்பதற்காக கிடங்கு அமைக்கும் பணிக்கு நில அளவீடு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கென இரும்புத் தூண்கள் அமைப்பதற்காக பெரிய அளவில் குழிகள் வெட்டி வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த இடத்துக்கு அருகே மாட்டிறைச்சிக் கடை நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் சந்தை வளாகத்தில் உரம் தயாரிக்கும் கிடங்கு அமைத்தால் அருகே உள்ள மாட்டிறைச்சிக் கடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, வாரச் சந்தையில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். எனவே, சந்தை வளாகத்தில் குப்பைக் கிடங்கு கட்ட அமைக்கக் கூடாது என வலியுறுத்தி காங்கயம் நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த உரக் கிடங்கு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைக் கூட்டம் காங்கயம் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கயம் வட்டாட்சியர் எஸ்.மகேஸ்வரன், காங்கயம் நகராட்சி ஆணையர் தேவிகா உள்ளிட்ட அலுவலர்களும், சந்தை வளாகத்தில் மாட்டிறைச்சிக் கடை நடத்தும் கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில்,   மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் சார்பாக கலந்து கொண்ட ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் பேசியபோது, நகராட்சிக்குச் சொந்தமான வாரச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் வணிக வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டி, சந்தையின் பரப்பளவு பாதியாகக் குறைந்துள்ளது. கடும் நெருக்கடியான இந்த சந்தை வளாகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சமுதாயக் கூடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தபோது, இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது உரக் கிடங்கு அமைப்பதற்காக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவது இப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த உரம் தயாரிக்கும் இடத்தை மாற்றி அமைத்து, குறைந்த பரப்பளவே உள்ள சந்தை வளாகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் காங்கயம் வட்டாட்சியர் எஸ்.மகேஸ்வரன் கூறியபோது, சந்தை வளாகத்தில் உரக் கிடங்கு கட்டுவது உறுதி. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளின் துர்நாற்றம் சந்தை வளாகத்தைப் பாதிக்காத வகையில் உரம் தயாரிக்கப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com