நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில்  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.அசோகன் தலைமை வகித்தார்.  வட்டாட்சியர்கள் தங்கவேல் (உடுமலை),  கலாவதி (மடத்துக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகள் பேசியசாவது:
கே.பாலதண்டபாணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):
உடுமலை அருகே பாலாற்றின் வழித் தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.  பிஏபி வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் பாப்பான்குளம் ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் உடனடியாக அகற்ற வேண்டும். 
மேலும், காட்டுப் பன்றிகளால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் சேதமடைகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்களை தடுக்கவும், மக்காச்சோள  விதைகள்,  மருந்துகள் விலையேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மௌனகுருசாமி, ரங்கசமுத்திரம்:
பிஏபி வாய்க்கால்களில் இரவு நேரங்களில் நடைபெறும் தண்ணீர்த் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கண்காணிப்புக் குழுக்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் பிஏபி ஓடைகள், நீர் வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ், கணக்கம்பாளையம்:
உடுமலை அருகே உள்ள எஸ்வி புரம் வாய்க்காலில் குப்பைகளால் நீரில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. நகராட்சி இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நித்யானந்தம், மடத்துக்குளம்: 
தனியார் நிறுவனங்களில் போலி விதைகள் விற்கப்படுகின்றன. விதைகளுக்கு தரச் சான்றும் இல்லை. ரசீது இல்லாமலும் விற்கப்படுகின்றன. வேளாண்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் இரவு நேரங்களில் அத்துமீறி வெடிகள் வெடிக்கப்படுகின்றன. லாரிகளில் கற்களை அதிக பாரமாக ஏற்றிச் செல்கிறார்கள். வருவாய்த் துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதன், பூலாங்கிணறு:
பெட்ரோல், டீசல் விலை  உயர்வால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சர்க்கரை ஆலைகளை எத்தனால் ஆலைகளாக மாற்றவும், எத்தனாலுக்கு விலை நிர்ணயிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் விவசாயிகள்:
மடத்துக்குளம் வட்டத்தில் ஆங்காங்கே மணல் திருட்டு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வேடப்பட்டியில் உள்ள கோயில் நிலத்தில் 200 லோடு கிராவல் மண் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் புகார்கள் கூறினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இவ்வாறு விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com