திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் தெப்போற்சவம்வ்

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
 கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் திருமுருகன்பூண்டி முதன்மையானது. மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய 3 சிறப்புகளைப் பெற்றது. சமயக் குறவர்களால் பாடல் பெற்றதுமான திருமுருகநாத சுவாமி கோயில் கொங்கு நாடுக்கு உள்பட்ட திருமுருகன்பூண்டியில் உள்ளது. கங்காதேவி மகாமக குளத்தில் மூழ்கி மாதவனேஸ்வரரை வணங்கி தம் பாவங்களை போக்கினார் என்பது ஐதீகம். 
 நோய் தீர்க்கும் குளங்கள்- இந்த  திருமுருநாத சுவாமி கோயிலில் அக்னி தீர்த்தம், செண்பக தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சண்முக தீர்த்தம், மகாமக குளத்தீர்த்தம் என 7 தீர்த்தக் குளங்கள் உள்ளது.
 இந்தக் குளத்தில் குளிப்பவர்களின் நோய்கள் குணமாகிறது. மேலும் மனநிலை குன்றியவர்கள் இங்கு தங்கி தீர்த்தக் கிணற்றில் குளித்து நோயை தீர்த்து செல்வது இன்றும் நடைபெற்று வருகிறது. இங்குள்ள தெப்பக்குளம் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
 மகாமக திருநாளன்று புனித கங்கையானவள் தீர்த்தவடிவில் திருக்குளத்தில் நீராடி மகிழ்ந்து திருமுருகநாதரை வணங்கி செல்வாள். காசி, கங்கை, கும்பகோணம் முதலான புண்ணியத் தலத்தில் உயர்ந்தோருக்கு தானம் கொடுத்து வணங்கிய பலனையும் பெறுவார் என்பதும், அதேபோல் மகாமகத் திருநாளன்று இத்திருக்குளத்தில் புனித நீராடி மகாமக பிள்ளையாரை வணங்கி அருள்மிகு திருமுருகநாத சுவாமியை வழிபடுபவர்கள் கொடிய துன்பத்தை தருகிற வினையில் இருந்து நீங்கி, சிவானந்தமான பெருவாழ்வையும், சிவசாருப பதவியையும் பெற்று மண்ணில் சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
 இந்நிலையில்,  திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மகாமக கணபதி ஆலையம் அருகே உள்ள மகாமக திருக்குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் தெப்பத்தேர் உற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 இதில் புஷ்ப பல்லக்கில் சிவன், பார்வதி சுவாமிகள் அம்பிகை சமேத சந்திரசேகராக  தெப்பக்குளத்தில் இறங்கினார். அப்போது, பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோவில் பரம்பரை சிவாச்சாரியார் குருக்கள் ஆகம முறைப்படியும், தமிழ் வேதங்கள் பாடியும், சிறப்பு பூஜைகள் நடத்தி புண்ணிய தீர்த்தத்தை குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 பின்னர் மழை பொழியவும், விவசாயம், தொழில் வளம் பெருகவும், உடற்பிணி, உள்ளப்பிணி நீங்கி உயிர் வாழவும், பிராத்தனை செய்து மேகராக குறிஞ்சி பண்ணில் தேவாரம் பாடப்பெற்றும், வேதசிகாமக மந்திரங்கள் ஐந்தெழுத்து மந்திரம் முழக்கம் செய்தும், அமிர்தவர்ஷினி ராகத்தில் நாதஸ்வரம் இசைக்க சிறப்பு பிராத்தனை வழிபாடு நடந்தது.
 விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அறநிலையத் துறை அதிகாரிகள், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தக்கார் லோகநாதன், செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி மற்றும் பசுமை பாரதத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவரும், ஓம் பசுமை அங்காடி நிறுவனருமான  உமாசங்கர், திருப்பூர் சைவ சித்தாந்த சபை நிர்வாகிகள் ஆகியோர் செய்து இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com