பல்லடம் கால்நடை மருந்தகத்தில்  கால்நடைகளைத் தூக்கும் கருவியின் இலவச சேவை துவக்கம்

பல்லடத்தில் பழனியப்பன், தெய்வானை அறக்கட்டளை சார்பில் அரசு கால்நடை மருந்தகத்தில், எழுந்து நிற்க

பல்லடத்தில் பழனியப்பன், தெய்வானை அறக்கட்டளை சார்பில் அரசு கால்நடை மருந்தகத்தில், எழுந்து நிற்க முடியாத கால்நடைகளைத் தூக்கும் கருவி இலவச சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
பல்லடம் அரசு கால்நடை மருந்தகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவரான நடராஜன் தனது பெற்றோர் பழனியப்பன்,தெய்வானை நினைவாக அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில், எழுந்து நிற்க முடியாத கால்நடைகளைத் தூக்கும் கருவியை உருவாக்கி அரசு கால்நடை மருந்தகத்துக்குக் கொடுத்துள்ளார். 
பல்லடம் வடுகபாளையம் அரசு கால்நடை மருந்தகத்தில் இக்கருவியைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு பல்லடம் மருத்துவர் அன்பரசு தலைமை வகித்தார். மருத்துவர் நடராஜன் முன்னிலை வகித்தார். எழ முடியாத கால்நடைகளைத் தூக்கும் கருவி இலவச சேவையை கால்நடை பராமரிப்பு துறையின் திருப்பூர் மண்டல இணை இயக்குநர் மருத்துவர் அ.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். துணை இயக்குநர் குழந்தைசாமி, உதவி இயக்குநர் முருகேசன்,விவசாயிகள் பங்கேற்றனர். 
இது குறித்து மருத்துவர் நடராஜன் கூறியதாவது:
கால்நடைகள் கன்று ஈன்றுவதற்கு முன்பும், பின்பும் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்படும். மேலும், சத்துப் பற்றாக்குறை, தசைத் தளர்வு, நரம்புத் தளர்ச்சி போன்றவையால் கால்நடைகள் எழுந்து நிற்க முடியாது. இதுபோன்ற நிலையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க மிகுந்த சிரமம் ஏற்படும். 
எழுந்து நிற்க முடியாத கால்நடைகளைத் தூக்கும் கருவி திருப்பூர் மாவட்டத்தில்   கருவி இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே சிலர் இக்கருவியை உருவாக்கி வாடகைக்கு விடுகின்றனர். இக்கருவியை பயன்படுத்த குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் செலவு ஆகும். அப்போதுதான் கால்நடைகளைக் காப்பாற்ற முடியும்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் நலன் கருதி எனது பெற்றோர் நினைவாக அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலமாக எழுந்து நிற்க முடியாத கால்நடைகளைத் தூக்கும் கருவியை  கால்நடை மருந்தகத்துக்கு வழங்கி உள்ளேன். இது முற்றிலும் கட்டணம் இல்லாத இலவச சேவையாகும். 
தேவைப்படுவோர் 94438 20361 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com