கடந்த ஆண்டில் 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: "சைல்டுலைன்' அமைப்பினர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக  "சைல்டு

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக  "சைல்டு லைன்' அமைப்பின் மாவட்ட இயக்குநர் எஸ். ஷைன் தாமஸ், மாவட்ட சமூக நல அலுவலர் ஜி. நாகலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தருமபுரி  "சைல்டு லைன்' (1098)  சார்பில் "என் நண்பன்' வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், புதன்கிழமை காலை கைப்பட்டை கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து வியாழக்கிழமை அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் மற்றும் அரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அதியமான்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் சிறார் திருமணத்துக்குக் காரணம் பெற்றோர்களா அல்லது சிறார்களா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து நான்கு சாலைச் சந்திப்பு வரை சிறார் திருமணத்துக்கு எதிராக விழிப்புணர்வு மனிதச் சங்கிலியும், சனிக்கிழமை முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது.
நவ. 19ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், நவ. 20ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடிப் போட்டியும் நடத்தப்படவுள்ளன.
தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2011-இல் இருந்து சைல்டுலைன் செயல்பட்டு வருகிறது. 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 180 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 சிறார் தொழிலாளர்களை மீட்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் படிக்க வைத்து வருகிறோம். பள்ளி இடை நின்ற 37 சிறார்களை மீட்டு கல்வித் துறை மூலம் தொடர்ந்து படிக்க வைத்து வருகிறோம்.
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தை சிறார்நேய மாவட்டமாக மாற்றுவதற்காக அனைத்துத் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு கருத்தரங்குகளை, கணக்கெடுப்புப் பணிகளை நடத்தி வருகிறோம் என்றனர் அவர்கள்.
பேட்டியின்போது, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆர். ஆனந்தி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com