கந்தசஷ்டி பெருவிழா: சூரனை வதம் செய்தார் சுப்பிரமணியர்

தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி

தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சுப்பிரமணியர்,  சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. 
குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி, லட்சார்ச்சனை பெருவிழா, கடந்த நவ.8-ஆம் தொடங்கியது.  நவ. 14-ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி சுப்பிரமணியர் எழுந்தருளினார்.  இந்தத் திருத்தேருடன் சூரன் அமர்ந்திருத்த வாகனம், குமாரசாமிப்பேட்டை  திருக்கோயிலிருந்து நான்கு முனைச் சாலை சந்திப்பு வழியாக தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்திற்கு வாண வேடிக்கை நிகழ்த்த,  ஊர்வலமாக அத்திருத்தேரில் வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு,  யானை, சிங்கம், சேவல் வடிவத்தில்  வந்த சூரபத்மனை,  சுப்பிரமணிய சுவாமி வதம் செய்தார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் தருமபுரி நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மேலும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில், விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல,  அன்னசாகரம், லளிகம்,  பழைய பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம்  நடைபெற்றது. விழாவின் நிறைவுநாளான புதன்கிழமை (நவ.14) காலை 10 மணிக்கு, குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பூர்த்தி ஹோமம்,  நண்பகலில் இடும்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் உத்ஸவம் நடைபெறுகிறது. மேலும், பொன்மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி திருவீதி  உலா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் சூரசம்ஹார விநாயகர் விழாக்குழுவினர்
செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com