ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு ஆளுநரின் ராஜ்யபுரஷ்கார் விருது பெற்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 1000 சாரணர்களை மாநில

தமிழ்நாடு ஆளுநரின் ராஜ்யபுரஷ்கார் விருது பெற்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 1000 சாரணர்களை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சனிக்கிழமைப் பாராட்டிச் சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாரண- சாரணீயர்கள் 1000 பேர், பிரவேஷ், பிரதம சோபன், திவித்திய சோபன், திரித்திய சோபன் மற்றும் ராஜ்யபுரஷ்கார் நிலைகளில் பயிற்சி முடித்து மாநில ஆளுநரின் விருதுகளைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இந்த விழாவில் கலந்து கொண்டு, விருதுகளைப் பெற்ற சாரணர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். 
விழாவில் அவர் பேசியது: பாரத சாரண- சாரணீயர் சங்கம் மாணவர்களுக்கு நல்லொழுக்கம், கட்டுப்பாடு, உதவும் மனப்பான்மை, சமூக சேவை, மனிதநேயம், தலைமைப் பண்பு உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 1943ஆம் ஆண்டு முதல் சாரணர் சங்கம் செயல்பட்டு வருகிறது. 
தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் 580 படைப்பிரிவுகளில் சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் இதில் இணைத்துக் கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.  மாநில ஆளுநரின் விருதுகளைப் பெற்றுள்ளவர்கள் எதிர்காலத்தில் தேசிய விருதுகளையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார் அன்பழகன்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லாகான், சார் ஆட்சியர் ம.ப. சிவன்அருள், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர். அன்பழகன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர் .வெற்றிவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, மாவட்டக்கல்வி அலுவலர்கள் உஷாராணி, பொன்முடி, குழந்தைவேல், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா, பாரத சாரண- சாரணீயர்கள் சங்கத்தின் செயலர் வெங்கடேசன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com