தருமபுரி

தருமபுரியில் கூடுதலாக "சைல்டுலைன்' துணை மையங்கள் அமைக்கப்படுமா?

சா. ஜெயப்பிரகாஷ்

தொலைதூர எல்லைகளைக் கொண்டிருக்கும் தருமபுரி மாவட்டத்தில், சிறார் குற்றங்களில் தலையிடும் வகையில் கூடுதலாக துணை மையங்களை "சைல்டுலைன்' நிறுவ வேண்டும் என சிறார் நல ஆர்வலர்கள் கோருகின்றனர்.
18 வயதுக்குள்பட்ட சிறார்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் "சைல்டுலைன் இந்தியா பவுண்டேஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 1996-இல் "சைல்டுலைன்' என்ற அமைப்பை நாடு முழுவதும் உருவாக்கியது. 
1098 என்ற ஒருங்கிணைந்த- கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் பெறப்பட்டு, உடனுக்குடன் அந்தச் சிறாரை அணுகி, தீர்வுகளைக் காணும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை நிறுவனங்கள் நியமனம் செய்யப்பட்டன. அவ்வாறு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களிலும் தற்போது "சைல்டுலைன்' அமைப்பு செயல்படுகிறது.
கடந்த 2015-இல் சைல்டுலைன் அமைப்புக்கு வந்த மொத்த அழைப்புகள் 360 கோடி. 24 மணி நேரமும், விடுமுறைகளில்லா 365 நாள்களும் இச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கணிசமான தொகையை ஆண்டு தோறும் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள்  நலத் துறை வழங்குகிறது. பிற நன்கொடைகள் மூலம் சைல்டுலைன் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை 2011-இல் இணை நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கி,  தலா ஓர் இயக்குநர்,  ஒருங்கிணைப்பாளர், ஆற்றுப்படுத்துநர், தன்னார்வலர் மற்றும் அலுவலகப் பணியாளர் என 5 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  கடந்த 2017 -18-ஆம் நிதியாண்டில் மட்டும் இக் குழுவினரால் 180 சிறார் திருமணங்களில் தலையீடு செய்யப்பட்டிருக்கிறது.  18 சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  37 பேர் பள்ளிகளில் இடைநின்றவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஆசிரியர் மற்றும் பெற்றோர்களால் உடலாலும் மனதாலும் துன்புறுத்தப்பட்ட 137 சிறார்களின் அழைப்புகளில் தலையீடு செய்யப்பட்டுள்ளது.
 இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.  ஆனால்,  தருமபுரி போன்ற பரந்துவிரிந்த மாவட்டத்தில் தொலைதூர எல்லைகளில் உள்ள கிராமங்களை இந்தக் குழுவினர் சென்றடைவது சிரமமான ஒன்றாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக,  தருமபுரி நகரிலுள்ள சைல்டுலைன் மையத்திலிருந்து பென்னாகரத்தின் ஏரியூர், நாகமரை போன்ற பகுதி கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தது 3 மணி நேரம் ஆகும்.  அதன்பிறகு அங்கிருந்து சிறாரை மீட்டு வரும் சூழல் ஏற்படின் மீண்டும் நகரிலுள்ள இல்லத்துக்கோ, குழந்தைகள் நலக் குழுமத்துக்கோ கொண்டு வர மேலும் 4 மணி நேரம் ஆகும்.
 ஒருவேளை பாலியல் துன்புறுத்தலாக இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் மருத்துவப் பரிசோதனையோ, சிகிச்சைக்கோ கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
எனவே, அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில் சைல்டுலைனில் இரு துணை மையங்களை அமைக்க வேண்டும் என சிறார் நல ஆர்வலர்கள் கோருகின்றனர்.
அவ்வாறு அமைக்கப்படும் போது, துணை மையங்களில் தலா 3 பணியாளர்கள் நியமிக்கப்படலாம்.  பாதிக்கப்பட்ட சிறாரை அடுத்த 2 மணி நேரத்துக்குள் மீட்டு தருமபுரி நகருக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்கிறார்கள் அவர்கள்.
இரு துணை மையங்கள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் இதற்காக பரிந்துரைக்க இயலும்.  மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தால், விரைவில் அமைக்கப்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சிறார் ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT