யாழும், பறையும் பழந்தமிழர் இசைக் கருவிகள்'

யாழும், பறையும் பழந்தமிழர் இசைக் கருவிகள் என்றார் வரலாற்று ஆய்வாளர் த. பார்த்திபன்.


யாழும், பறையும் பழந்தமிழர் இசைக் கருவிகள் என்றார் வரலாற்று ஆய்வாளர் த. பார்த்திபன்.
தருமபுரியில் தமிழ்க் கலை இலக்கியப் பட்டறை- கலைத்தாய் சிலம்பம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பறை இசைப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் தமிழ் இலக்கியத்தில் பறை' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
யாழும் பறையும் தமிழர் இசைக் கருவிகள். ஆனால், யாழ் பெற்ற இடத்தை பறை பெறவில்லை என்பதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது. அதை ஒரு சமூகத்தின் கருவியாக மாற்றிவிட்டார்கள். இது உண்மையல்ல.
86 வகையான பறைக் கருவிகள் இருந்ததாக பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது வரை 32 கருவிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை சென்னையிலுள்ள தொல்பொருள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வீணையையும், பறை இசையையும் சேர்ந்திசைக்க முடியும். இதற்கான குறிப்புகள் சீவகசிந்தாமணியில் உள்ளன. ஆனால், எப்படி இணைத்து இசைப்பது என்பதற்கான தாளவிதிகளை இழந்துவிட்டோம். அதற்கான பதிவுகள் நம்மிடம் இல்லை.
தனி ஆவர்த்தனக் கருவியாக பறையை மாற்றிவிட்டனர். எல்லா இசைக் கருவிகளுடனும் இணைத்து வாசிக்கும் முறைகளை உருவாக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் 400 இடங்களில் பறை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஐவகை நிலத்துக்கும் சொந்தமானதாகத்தான் பறை இருந்திருக்கிறது. குரும்பர் இனமக்கள் பயன்படுத்தும் மகுடம்' என்ற வகைப் பறை இசைக் கருவி, கையால் அடிக்கக் கூடியது. இதேபோல, மேளம், துடி, உடுக்கை போன்றவையும் பறை இசைக் கருவிகளே.
பறை உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை பழங்குடியின மக்களிடமிருந்துதான் நாம் அப்படியே எடுத்துக் கொள்ள முடியும். கிடைக்காமல் போன மற்ற பறை இசைக் கருவிகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்றார் பார்த்திபன்.
விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் சுஷீல்குமார் தலைமை வகித்தார். தருமபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் உமாசங்கர், பாலா, தமிழ் இசை இணைய பண்பலை வானொலியின் இயக்குநர் பாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கலைத்தாய் சிலம்பம் அமைப்பின் பயிற்சியாளர் சாமுவேல் அறிமுகவுரை நிகழ்த்தினார். இலக்கியப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் அ. திருவள்ளுவன் வரவேற்றார். சோ. கார்த்திகேயன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com