தருமபுரி

வரத்துக் குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு

DIN

வெளி மாவட்டங்களிலிருந்து வரத்துக் கணிசமாக குறைந்துள்ளதால் தருமபுரியில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.
பென்னாகரம், அரூர் உள்பட மாவட்டத்தில் 5 இடங்களில் உழவர்சந்தைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர, மாவட்டம் முழுவதும் தினசரி, வாரக் காய்கறி சந்தைகள் உள்ளன. இந்தச் சந்தைகளுக்கு தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
தற்போது பனிக் காலம் தொடங்கியிருப்பதால் முருங்கையில் காய் பிடிப்பு இல்லாததால் சந்தைகளுக்கு வரத்துக் குறையத் தொடங்கியிருக்கிறது. இதுதவிர, ஈரப்பதம் காரணமாக சின்ன வெங்காய வரத்தும் வெகுவாகப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. 
இதுபோன்ற காரணங்களால் காய்கறி வரத்துக் குறைந்து வருவதால் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சில நாள்களுக்கு முன்பு வரை ரூ. 30-க்கு  விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 36-க்கும், ரூ. 80-க்கு விற்ற முருங்கைக்காய் கிலோ ரூ. 120 வரையிலும், முருங்கை காய் ஒன்று ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, பட்டாணி கிலோ ரூ. 80-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ. 100-ஆக அதிகரித்திருக்கிறது. தக்காளி கிலோ ரூ. 14, கத்தரிக்காய்,  உருளைக்கிழங்கு தலா ரூ. 24, பெரிய வெங்காயம் ரூ. 20 என பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து காய்கறி சில்லரை விற்பனையாளர் கூறியது: பனிக் காலம் தொடங்கி விட்டதால் மாவட்டத்தில் விளையும் காய்கறிகள்தான் அதிகளவில் விற்பனைக்கு வரும். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் விளைச்சல் குறைவால் வரத்துக் குறைய ஆரம்பித்திருக்கிறது.
மேலும் கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதால் ஐயப்பன் கோயிலுக்கு பலர் மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்திருப்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்து இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் வரும் நாள்களில் விலை உயர்வதைத் தவிர்க்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT