குப்பை கொட்டும் இடமாகிப் போன தண்ணீர் தொட்டி: சீர்செய்யக் கோரிக்கை

தருமபுரி நகரில் கடை வீதி அருகே உள்ள விவேகானந்தர் நகர மாளிகை முன் குப்பை கொட்டும் இடமாக மாறிப்போன

தருமபுரி நகரில் கடை வீதி அருகே உள்ள விவேகானந்தர் நகர மாளிகை முன் குப்பை கொட்டும் இடமாக மாறிப்போன தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடத்தை சீர் செய்ய வேண்டும் என அப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி நகரில் உள்ள விவேகானந்தர் நகர மாளிகை முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டி நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. கடை வீதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இதைத் தவிர, பழக்கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் உள்ளன. இந்த பகுதி வியாபாரிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்கள் முன் வரை நல்ல நிலையில் இயங்கி வந்த இந்த தண்ணீர் தொட்டிக்கு, நீர்ஏற்றும் மின் மோட்டார் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொட்டியிலிருந்து தண்ணீர் பிடிக்க இயலாமல் போனது. மின் மோட்டார் பழுதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும், இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால், பல மாதங்களாக தண்ணீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாததால், அந்த தொட்டி அமைந்துள்ள இடத்தில், நாள்தோறும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  
எனவே, அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் நலன் கருதி, மின் மோட்டார் பழுதை நீக்கி, மீண்டும் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
மேலும், அங்கு கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி அப்பகுதியை சுத்திகரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com