உணவுத் திருவிழாவில் அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக அறிவியல் கண்காட்சி, புத்தகத் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத்


தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக அறிவியல் கண்காட்சி, புத்தகத் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை தொடங்கியது.
பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு, செந்தில் கல்விக் குழுமத்தின் தலைவர் செந்தில் சி. கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர் மு. பொன்முடி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். செந்தில் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் கே. மணிமேகலை, பாரம்பரிய உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
அறிவியல் கண்காட்சியில் ஏறத்தாழ 500 அறிவியல் ஆய்வு மாதிரிகள் மாணவ, மாணவிகளால் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றையும் வந்திருந்த பார்வையாளர்களுக்கு அதனைத் தயாரித்த மாணவ, மாணவிகள் செயல்விளக்கமும் செய்துக் காட்டினர்.
புத்தகத் திருவிழாவில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சிறார்களுக்கான நூல்கள், மற்றும் பொதுவான இலக்கிய, வரலாற்று நூல்கள் என ஏறத்தாழ 35 ஆயிரம் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரிய உணவுத் திருவிழாவில், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள் சமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உடல் நலன் சார்ந்த பயன்களையும் மாணவ, மாணவிகள் விளக்கினர்.
மூலிகை மருத்துவம் என்ற அரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட சாறுகள், சூப்புகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் பயன்களையும் மாணவ, மாணவிகள் விளக்கினர். வந்திருந்த பார்வையாளர்களுக்கும் அவை வழங்கப்பட்டன. தங்கள் பெற்றோரிடமிருந்து இவற்றைத் தயாரிப்பது குறித்து கேட்டறிந்து வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
தமிழும் அறிவியலும் என்ற அரங்கில், தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட தமிழ்ச் சமூகத்தின் சொத்துக்களாகக் கருதப்படும் பாரம்பரிய சின்னங்களைப் பற்றிய மாதிரிகள் வைக்கப்பட்டு, அவற்றின் அம்சங்களையும் மாணவர்கள் விளக்கினர். ஆச்சரியமூட்டும் வகையில் மாணவ, மாணவிகள் விளக்கம் தரும் பெரும்பாலான மாதிரிகளை உருவாக்குவதற்கு இரு நாள்கள் போதுமானதாக இருந்ததாக அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இதுபோன்ற முப்பெரும் விழாவைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் கூறும் பள்ளியின் செயல் அலுவலர் சக்திவேல், கடந்த ஆண்டு சுமார் ரூ. 3 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளியில் பயிலும் 4 ஆயிரம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முப்பெரும் விழா, செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com