1,446 பேருக்கு ரூ. 10.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாக்களில் 1,446 பயனாளிகளுக்கு

தருமபுரி மாவட்டத்தில் இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாக்களில் 1,446 பயனாளிகளுக்கு ரூ. 10.50 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும்,  அதியமான்கோட்டை அதியமான் கோட்டத்திலும் இந்த நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். 
அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தருமபுரி வட்டத்தைச் சேர்ந்த 831 பயனாளிகளுக்கு ரூ. 5.09 கோடி மதிப்பிலும், அதியமான்கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் நல்லம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த 615 பயனாளிகளுக்கு ரூ. 5.50 கோடி மதிப்பிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் அன்பழகன் பேசியது:
ஏற்கெனவே  பாலக்கோடு, காரிமங்கலம்,  அரூர்,  பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பென்னாகரம் ஆகிய வட்டங்களில் 3,592 பயனாளிகளுக்கு ரூ. 22.34 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழாண்டில் மாநிலம் முழுவதும் அரசுக் கல்லூரிகளில் 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.68.46 கோடி கூடுதல் செலவாகும். மேலும், புதிய பாடப் பிரிவுகளுக்காக ரூ. 62.75 கோடியில் 324 வகுப்பறைக் கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தரப்படும். 
தருமபுரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின்படி நிகழாண்டில் 2097 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.  விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லாகான், சார் ஆட்சியர் ம.ப. சிவன்அருள், வேளாண் துறை இணை இயக்குநர் ஆர்.ஆர். சுசீலா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் அஜய் சீனிவாசன், ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதாராணி, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு, தொழிலாளர் துறை உதவி ஆணையர் கே.பி. இந்தியா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர். அன்பழகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com