தருமபுரி

காணும் பொங்கல்: கிராமங்களில் எருது விடும் விழா

DIN

தருமபுரி மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா, கிராமங்களில் எருதாட்டம், கோயில்களில் பொங்கல் வைப்பது என களைகட்டியது.
பொங்கல் திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை காணும் பொங்கலையொட்டி, காலை முதலே இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் கிராமப் பகுதியில் உள்ள மீன் கடைகள், ஆடு, கோழிகள் விற்கும் இறைச்சிக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, காலை முதல் மாலை வரை கிராமங்களில் மாரியம்மன் கோயில், புற்றுக் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதையடுத்து, தருமபுரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில், காளைகளுக்கு இருபுறமும் கயிறு கட்டி விளையாடும் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரியில் எஸ்.வி. சாலை, கடைவீதி, மதிகோன்பாளையம், செங்கொடிபுரம், செட்டிக்கரை, சோகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அந்தந்த காவல் நிலையங்களில் அனுமதி பெற்று எருதாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று காளைகளோடு விளையாடினர்.
இவை தவிர, வழுக்கு மரம் ஏறுதல், உறியடி உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடினர். குடும்பத்துடன் வந்திருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல் தருமபுரி, ஒசூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை
புரிந்தனர்.
காவேரிப்பட்டணம் விநாயகர் கோயில் அருகே நடைபெற்ற விழாவில் 15 எருதுகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரியை அடுத்த லைன் கொல்லையில் நடைபெற்ற எருது விடும் விழாவை கிருஷ்ணகிரி, கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்புப் பணியில் போலீஸார், ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியில் ஏழு கிராமத்துக்கு சொந்தமான திடலில் எருதாட்டம் நடைபெற்றது. இதில் மாங்கரை, நூலஹள்ளி, சாலை குள்ளாத்திரம் பட்டி, மோட்டுப்பட்டி, ஆணைக்கல்லனூர், புள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஏழு கிராம இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு காளைகளை வடம்பிடித்து இழுத்து எருதாடினர்.
கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட கே.அக்ராஹரம் பகுதியில் நடைபெற்ற எருதாட்டம் விழாவில், கூத்தபாடி கே.அக்ரஹாரம்,புதூர், அளேபுரம், மடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT