தருமபுரியை தக்கவைக்கத் துடிக்கும் பாமக: மீண்டும் கைப்பற்ற முனைப்புக் காட்டும் திமுக

தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவும், திமுக கூட்டணி சார்பில் திமுகவுக்கு நேரடி போட்டியில் இறங்கியுள்ளன.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவும், திமுக கூட்டணி சார்பில் திமுகவுக்கு நேரடி போட்டியில் இறங்கியுள்ளன.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் தருமபுரி,  பென்னாகரம்,  பாலக்கோடு, அரூர் (தனி),  பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் ஆகிய ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.  இவற்றில், பென்னாகரம் மற்றும் தருமபுரி பேரவைத் தொகுதிகளில் திமுகவைச் சேர்ந்தோர் சட்டப் பேரவை உறுப்பினர்களாக உள்ளனர்.  அதேபோல,  அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால்,  அவ்விரு தொகுதிகளுக்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள பாலக்கோடு பேரவைத் தொகுதி அதிமுக வசமும்,  அதேபோல, சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பேரவைத் தொகுதியும் அதிமுக வசமும் உள்ளன.
வாக்காளர்கள் விவரம்:  பாலக்கோடு- 2,23,980,  பென்னாகரம்- 2,34,646,  தருமபுரி- 2,53,804,  பாப்பிரெட்டிப்பட்டி- 2,50,878,  அரூர் (தனி) 2,33,018,  மேட்டூர்- 2,71,498 என 6 தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள்- 7,47,625, பெண் வாக்காளர்கள்- 7,20,159,  இதரர் 120 பேர் என மொத்தம் மக்களவைத் தொகுதியில் 14,6,7904 வாக்காளர்கள் 
உள்ளனர்.
இதுவரை வெற்றிபெற்றவர்கள்:  தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடந்த 1952-இல் சுயேச்சை, 1957-இல் டிஏஎம்எஸ் செட்டியார் (காங்கிரஸ்),1967 கந்தப்பன் (திமுக), 1971 பூவராகவன்  (காங்கிரஸ்), 1977-இல் வாழப்பாடி ராமமூர்த்தி (காங்கிரஸ்), 1980-இல் கே.அர்ஜூனன் (திமுக), 1984-இல் மு.தம்பிதுரை (அதிமுக), 1989 எம்.ஜி.சேகர் (அதிமுக), 1991 கே.வி.தங்கபாலு  (காங்கிரஸ்), 1996 பி.தீர்த்தராமன் (தமாகா), 1998 கே.பாரிமோகன் (பாமக), 1999-இல் பு.தா.இளங்கோவன் (பாமக), 2004-இல் இரா.செந்தில் (பாமக), 2009 இரா.தாமரைச் செல்வன் (திமுக), 2014-இல் அன்புமணி ராமதாஸ் (பாமக) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இதில், 1957 முதல் 1967 வரை மேட்டூர் மக்களவைத் தொகுதியில் இந்த தொகுதி இருந்தது.  மீண்டும் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தருமபுரி தொகுதியாக மாற்றப்பட்டது.  இதுவரை தருமபுரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 4 முறையும்,  திமுக 3,  பாமக 4,  அதிமுக 2,  தமாகா 1, சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.  பெரும்பாலும், அதிமுக மற்றும் திமுக உடன் பாமக கூட்டணி வைக்கும்போதெல்லாம் தருமபுரி பாமகவுக்கே ஒதுக்கப்படுவது குறிப்பிடதக்கது.  கடந்த 2014-இல் பாமக, அதிமுக மற்றும் திமுக என மூன்று கட்சிகளும் இத் தொகுதியில் களமிறங்கின.  இதில், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார்.
எதிர்பார்ப்பு: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரியில் விவசாயத்தைத் தவிர,  வேறு வாய்ப்புகள் இல்லை.  குறிப்பாக,  தொழில் வளம் ஏதுமில்லாததால், வேலைவாய்ப்புகள் கிடைப்பது அரிது.  இதனால், சுமார் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைத் தேடி திருப்பூர்,  கோவை, சென்னை, ஒசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.  சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் இந்த மாவட்ட மக்கள் உள்ளனர்.  இந் நிலைமாறி, தருமபுரி அதியமான்கோட்டை அருகே 1700 ஏக்கரில் சிப்காட் தொழில்பேட்டை,  நல்லம்பள்ளி அருகே ராணுவ தளவாட ஆராய்ச்சி மையம்,  பென்னாகரம் பருவதனஅள்ளி சிட்கோ, அரூர் சிட்கோ ஆகிய தொழில்பேட்டைகள் அறிவிக்கப்பட்டன.  இந்த அறிவிப்புகள் பல ஆண்டுகளாக அறிவிப்புகளாகவே உள்ளன.  இதேபோல, வேளாண் தொழிலும் நீர்வளம் இல்லாததால்,  அவற்றை பெருக்கிட எண்ணெகொல்புதூர்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம்,  சின்னாறு கால்வாய் நீட்டிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் மேலாண் திட்டங்களும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளன.  தக்காளி மதிப்புக் கூட்டுதல்,  மலர்களிலிருந்து வாசனை திரவியம் எடுத்தல், மரவள்ளி கொள்முதல், சிறு தானியங்கள் மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேறுவது எப்போது என விவவாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் காத்திருக்கின்றனர்.
திமுக-பாமக நேரடி போட்டி: தருமபுரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக மருத்துவர் எஸ்.செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.  இவர் தேர்தல் அரசியலுக்கு புதியவர்.  இருப்பினும்,  இவரது தாத்த வடிவேல் கவுண்டர் தருமபுரியில் 1965-இல் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.  மேலும், இவரது குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டுள்ளது. இவை தவிர, தருமபுரி நகரில் மருத்துவமனைகள்,  ஆய்வகங்கள், கல்வி கூடம், நிதி நிறுவனம் என பல்வேறு தொழில்களில் இவரது குடும்பம் ஈடுபட்டு வருவதால்,  மாவட்ட மக்களிடையே புதியதாக அறிமுகம் தேவையில்லை.  இவை தவிர, கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு இவருக்கு கூடுதல் பலமாக உள்ளது.  
பாமக: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தற்போதைய தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக தருமபுரியில் மீண்டும் இரண்டாவது முறையா களமிறங்குகிறார்.  இந்த மாவட்டத்தில் நிலுவையிலுள்ள நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன்.  சிப்காட் தொழில்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.  கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றுவேன்.  
தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தை கொண்டுவருவேன் என பல்வேறு கோரிக்கைகளை கடந்த முறை போட்டியிடும்போது வாக்குறுதிகளாக அளித்தார்.  இதில், தருமபுரி-மொரப்பூர் ரயில் போக்குவரத்துத் திட்டதுக்கான அடிக்கல் நாட்டுவிழா அண்மையில் நடைபெற்றது.  இது இவருக்கு மக்களைச் சந்திக்க கூடுதல் பலமாக இருக்கும்.  இவை தவிர,  அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளின் துணையோடு மீண்டும் தருமபுரியை தக்கவைத்துக் கொள்ள பாமகவினர் துடிப்பாய் களமிறங்க தயாரக உள்ளனர் பாமகவினர். மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவராக அன்புமணி இருப்பதால்,  தருமபுரி வெற்றி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக அக் கட்சியினர் கருதுகின்றனர்.
இதேபோல,  அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.  அவ்வாறு அமமுக போட்டியிடும் பட்சத்தில், தருமபுரியில் திமுக, பாமக மற்றும் அமமுக என மும்முனைப் போட்டிய ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com